ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படும் கடைகள்: கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை பொதுமக்கள் புகார்

16 June 2021, 6:58 pm
Quick Share

ஈரோடு: மாவட்டத்தில் கொரோனா பெரும் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி பல கடைகள் சத்தியமங்கலம் பகுதியில் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா பெரும் தொற்று வேகமாக பரவி வந்த நிலையில் இதனை தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு தற்போது சில தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்ததன் காரணமாக கடந்த திங்கட்கிழமை முதல் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது. இதில் தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மார்க் கடைகள், சலூன் கடைகள், இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடைகள் என அனைத்தும் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் தொற்று குறையாத மாவட்டங்களான கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இந்த 11 மாவட்டங்களில் வழக்கம்போல் காய்கறி கடைகள், மளிகை கடைகள் செயல்படும் எனவும்,

புதிய தளர்வுகளுடன் இருசக்கர வாகனம் மற்றும் மிதிவண்டிகள் விற்பனை செய்யும் கடைகள்‌ தவிர அதனை பழுது பார்க்கும் கடைகள் மட்டும் செயல்படும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது.இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் சிலர் உயிரின் மதிப்பை உணராமல் லாபத்தின் நோக்கோடு அரசு விதித்துள்ள விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பொதுமக்களின் தேவைக்காக அத்தியாவசிய பொருட்களான மளிகைக் கடைகள் மற்றும் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தும், சத்தியமங்கலம் வணிகர் சங்கம் கொரோனா தொற்றின் தாக்கத்தைக் உணர்ந்தும் பொதுமக்களின் நலன் கருதியும் மதியம் ஒரு மணி வரை மட்டுமே மளிகை கடைகள் மற்றும் காய்கறிகள் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

இதனை ஏற்று அனைத்து மளிகை கடைகள், காய்கறி கடைகள் அனைத்தும் மதியம் ஒரு மணிக்கு மூடப்பட்டு வருகின்றது. அத்தியாவசிய பொருட்களான காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் கூட கொரோனா தொற்றின் ஆபத்தை உணர்ந்தும் பொதுமக்களின் நலன் கருதியும் மதியம் ஒரு மணியுடன் கடைகளை மூடியுள்ள நிலையில் தமிழக அரசின் விதிமுறைகளை மீறி எலக்ட்ரிகல் கடைகள், ஹார்டுவேர்ஸ் கடைகள், ஃபேன்சி ஸ்டோர்கள், இருசக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், பிளைவுட் விற்பனை செய்யும் கடைகள் என அனைத்து கடைகளும் பாதி கதவுகள் திறந்து வைத்து அரசு விதித்துள்ள விதிமுறைகளை மதிக்காமல் அலட்சிய போக்கோடு விற்பனை செய்து வருவதால் மக்கள் கூட்டம் காணப்படுகிறது,

இதனால் மேலும் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே இதுபோன்று அரசு விதிமுறைகளை மீறி கடைகளைத் திறந்து விற்பனை செய்து வரும் கடை உரிமையாளர்கள் மீது காவல்துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் கடுமையான நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு அபராதம் விதித்து கடைகளைப் பூட்டி சீல் வைத்தால் மட்டுமே சத்தியமங்கலம் பகுதியில் கொரோனா பரவுவதை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 159

0

0