லோடு வேனில் கடத்தி வரப்பட்ட 3 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
Author: kavin kumar7 August 2021, 2:31 pm
ராணிப்பேட்டை: கலவை அருகே வாகன சோதனையின்போது லோடு வேனில் கடத்தி வரப்பட்ட 3 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயத்தை கலவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு கலவை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கலவை அடுத்த சிருவிடாகம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அதிவேகமாக லோடுவேன் வருவதைக் கண்டு சோதனைக்காக போலீசார் மடக்கினர். போலீசாரை கண்ட லோடு வேன் ஓட்டுநர் உட்பட இருவர் லோடுவேனை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து லோடு வேனை சோதனை செய்ததில், நூறு,35 லிட்டர் கேன்களில் சுமார் 3500 லிட்டர் எரிசாராயம் அடைத்து கடத்திச் செல்வது தெரியவந்தது. இதனையடுத்து 3500 லிட்டர் எரிசாராயம் மற்றும் கடத்தலுக்கு உதவியாக இருந்த லோடுவேனை பறிமுதல் செய்த கலவை போலீசார் தப்பியோடிய இருவர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகன பதிவு எண் சேலம் என்பதாலும் வாகனம் பிடிபட்ட பகுதி காஞ்சிபுரம் செல்லும் கிராம குறுகிய சாலை என்பதாலும், சேலத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு அல்லது சென்னைக்கு இரவு நேரங்களில் எரிசாராயம் கடத்த முயன்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.மேலும் பறிமுதல் செய்த 3500 லிட்டர் எரிசாராயம் ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரதான சாலைகளை பயன்படுத்தாமல் கிராமங்கள் வழியாக செல்லும் குறுகிய கிராம சாலையை பயன்படுத்தி எரிசாராயம் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0
0