வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டு: சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது

18 April 2021, 1:26 pm
Quick Share

வேலூர்: கே.வி.குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சிறுவர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து, மூன்றரை லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் சந்தைமேடு பகுதியில் நேற்று கே.வி.குப்பம் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் வந்துள்ளனர். அவர்களை மடக்கிப் பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் இருசக்கர வாகனத்திற்கு உரிய ஆவணங்களை கேட்டுள்ளனர். அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அதில் கே.வி.குப்பம், பி.கே.புரம் வடுகன்தாங்கல், உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து கே.வி குப்பம் போலீசார் குடியாத்தம் தாழையாத்தம் பகுதியை சேர்ந்த விக்னேஷ், குடியாத்தம் ஆர்.எஸ் நகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன், குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டையை சேர்ந்த 18 வயது சிறுவன், கே.வி.குப்பம் அடுத்த நாகல் பகுதியை சேர்ந்த மூர்த்திரவி, குடியாத்தம் பிச்சனூர் பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுவன், கே.வி குப்பம் அடுத்த கீழ் ஆலத்தூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்த ஏழு திருட்டு இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களின் மதிப்பு சுமார் 3.5 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். தொடர் இருசக்கர வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 22

0

0