விதிகளை மீறி செயல்பட்டு வந்த பிரபல செல்போன் கடைக்கு சீல்

5 August 2020, 9:38 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே விதிகளை மீறி செயல்பட்டு வந்த பிரபல செல்போன் கடைக்கு காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஆணையர் உத்தரவின்பேரில் சீல் வைத்தனர்.

கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழகம் எங்கும் ஊரடங்கு தடை சட்டம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரை அமலில் உள்ளது. காஞ்சிபுரத்தில் தினந்தோறும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த பிரபல செல்போன் கடையான பூர்விகா என்ற கடையில் சமூக இடைவெளி இல்லாமல் வாடிக்கையாளர்களை அனுமதித்ததும், தமிழக அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்ததும் கேள்விப்பட்ட காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி அந்தக் கடைக்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அதில் வாடிக்கையாளர்களுக்கு சனிடைசர் அளிக்காமலும், முககவசம் இன்றி வந்த வாடிக்கையாளர்களுக்கு செல்போன் விற்பனை செய்ததும், சமூக இடைவெளி இல்லாமல் ஒன்றாக நிற்க வைத்தும் தெரிய வந்தது. இதனை கண்டறிந்த ஆணையர் செல்போன் வாங்க கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளர்களை வெளியேற்றி கடையை பூட்டி சீல் வைக்க பெரு நகராட்சி ஆணையர் மகேஸ்வரி நகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இதனடிப்படையில் பூர்விகா செல்போன் கடையை பூட்டி நகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர்.