நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்: திமுக, காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட 82 பேர் கைது

Author: Udayaraman
6 October 2020, 4:55 pm
Quick Share

திருப்பத்தூர்: ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற திமுக முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் உட்பட 82 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதி வழியாக கம்பி கொல்லை, மாங்கா தோப்பு உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளும் நாயக்கனேரி பனங்காட்டேரி சீக்கஜோனை உள்ளிட்ட மலைகிராம பகுதிகளிலிருந்து ஒரு லட்சத்துக்கும் மேலான மக்கள் வசித்து வருகின்றனர். ஆம்பூர் நகரத்திற்கு வந்து செல்லும் முக்கிய வழியான ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலத்தின் கீழ் மழைகாலங்களில் தேங்கி நிற்கும் மழை நீரில் அப்பகுதி மக்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுவதால் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற மனித நேய மக்கள் கட்சி ஆம்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்ததின் பேரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க 30 கோடி நிதி ஒதுக்கி அறிவித்தார்.

அதற்கான பணிகள் மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சட்டமன்ற உறுப்பினராக வில்வநாதன், திமுக வேலூர் நாடாளுமன்ற உறுப்பினராக கதிர் ஆனந்த் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர்.தேர்தலின் போது அப்பகுதி மக்களுக்கு ரயில்வே மேம்பாலத்தை அமைத்துத் தருவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த இருவரும் வாக்குறுதி அளித்ததோடு அதனை கண்டுகொள்ளாமல் உள்ள நிலையில் அதே கட்சியை சேர்ந்த முன்னாள் திமுக கவுன்சிலர்கள் யுவராஜ், பிரபாவதி, கணேசன் மற்றும் காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் சுதாகர் உள்ளிட்டோர் அப்பகுதி மக்களை தூண்டி விட்டு ஊரடங்கு உத்தரவையும் மீறி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப்போவதாக துண்டு பிரசுரம் வெளியிட்டனர்.

இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.இந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற திமுக முன்னாள் கவுன்சிலர்கள் யுவராஜ் கணேசன் பிரபாவதி மற்றும் காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் சுதாகர் உள்ளிட்ட 82 பேரை ஆம்பூர் நகர போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து ரோட்டரி ஹால் மற்றும் தனியார் மண்டபங்களில் அடைத்தனர்.

Views: - 36

0

0