காணாமல் போனவர்களை கண்டறியும் சிறப்பு முகாம்

22 November 2020, 6:24 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையின் சார்பில் கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போனவர்களை கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் நகரில் தனியார் திருமண மண்டபதில், காணாமல் போனவர்கள் பற்றி கண்டறியும் முகாமை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராம் தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் சரக காவல் துறை துணை தலைவர் சாமுண்டீஸ்வரி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியதாவது, மாவட்டத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் தற்போது வரை காணாமல் போனவர்கள் பற்றிய புகார்களின் அடிப்படையில் அவர்களை கண்டறிய காவல்துறையிடம் உள்ள புகைப்படங்களை புகார் அளித்தவர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் வீடியோ பதிவின் மூலம் காண்பிக்கப்படும்.

இந்த புகைப்படங்களில் உள்ளவர்களின் அங்க அடையாளங்களை கூர்ந்து கவனித்து சந்தேகம் இருப்பின் மீண்டும் மீண்டும் எங்களிடம் தெளிவுபடுத்தி கொள்ள வேண்டும். இறந்து போன நபர்களையோ அல்லது காணாமல் போன நபர்களையோ கண்டறிந்து கூடிய விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என டிஐஜி சாமுண்டீஸ்வரி கூறினார். முகாமில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்க்கு உட்பட்ட வாலாஜாபாத், காஞ்சிபுரம், மாகரல் ஸ்ரீபெரும்புதூர், மணிமங்கலம், சோமங்கலம் ,ஓரகடம், படப்பை ,பாலுசெட்டி சத்திரம் போன்ற 11 காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 80 நபர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.

2010ஆம் ஆண்டு முதல் விபத்து, தற்கொலை, இயற்கை மரணம் என காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 134 பேரின் முகவரி உள்ளிட்டவை கண்டறியப்படாமல் இருந்தது. இவர்களை அடையாளம் கண்டறியும் விதமாக இப்பகுதிகளில் உயிரிழந்து அடையாளம் தெரியாமல் உள்ளவர்களின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு காவல்துறை சார்பில் தயார் செய்யப்பட்டது. இப்புகைப்பட தொகுப்பின் ஒளிப்பதிவு, தங்களது உறவினர்கள் காணாமல் போனதாக புகார் கொடுத்தவர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. இதில் ஸ்ரீபெரும்புதூர் சரக உதவி கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன், காஞ்சிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் மணிமேகலை, காவல் ஆய்வாளர்கள் வெற்றி செல்வன், நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Views: - 0

0

0