இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமையை வழங்க வேண்டும்: அமைச்சர் மஸ்தான் பேட்டி…

Author: kavin kumar
28 October 2021, 8:28 pm
Quick Share

வேலூர்: இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமையை வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசு வலியுறுத்தி வருவதாகவும், பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளதாகவும் தமிழக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம்,வேலூர் அப்துல்லாபுரத்தில் உள்ள தொழிற்பயிற்சி மைதானத்தில் வரும் 3 ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் இலங்கை தமிழர் ஏதிலியர்களுக்கு 20 ஆயிரம் குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை துவங்கி வைக்கவுள்ளார். அதற்காக அடிக்கல் நாட்டி விழா நடக்கவுள்ள இடத்தை தமிழக சிறுபான்மைத்துறை அமைச்சர் மஸ்தான் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சி தலைவர் பாபு, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். பின்னர் இலங்கை தமிழர் முகாமிலும் ஆய்வு செய்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

பின்னர் சிறுபான்மை நலத்துறைஅமைச்சர் மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறுகையில், கலைஞர் ஆட்சியில் தற்காலிக முகாம் அமைத்து கொடுக்கப்பட்டது.அவர்களுக்கு பாதுகாப்பான முகாம்கள் அமைத்து கொடுக்கும் நல்ல சிந்தனையில் 106 முகாம்களில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை கட்டிகொடுக்கும் பணியை வரும் 3 ஆம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் துவங்கவுள்ளார். மற்ற மாவட்டங்களிலும் அமைச்சர்கள் தலைமையில் குடியிருப்புகள் கட்ட அடிக்கல் நாட்டப்படும். இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு கல்வி வேலைவாய்ப்பு வாழ்வாதாரம் வழிவகை செய்ய ரூ.317 கோடி திட்டத்தை செயல்படுத்த முதல்வர் வேலூர் வரவுள்ளார். 3 ஆம் தேதி அதற்கான விழா நடைபெறும். 10 நாட்களில் மற்ற மாவட்டங்களிலும் இதே போல் இலங்கை தமிழர் குடியிருப்புகள் கட்டும் பணிகள் துவங்கபடவுள்ளது.

மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் வீடுகள் கட்டிகொடுக்கபடும் சுமார் 60 ஆயிரம் பயனாளிகள் வருவார்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இலங்கை தமிழர்களுக்கு கல்விக்காக அரசு பல்வேறு உதவிகளை செய்துள்ளது. நான் மூன்று மாதங்களுக்கு முன்பு வந்து ஆய்வு செய்தேன். அவர்களின் குறைகளை படம் எடுத்து முதல்வரிடம் கொடுத்து முதல்வர் அந்தந்த மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் கேட்கப்பட்டு ஆட்சியர்களும் பேசினார்கள். 106 துறை சார்பாக அறிக்கை பெறப்பட்டு அதன் பின்னரே முதல்வர் இலங்கை தமிழர் குடியிருப்பு திட்டத்தை அறிவித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை அளிக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக முதல்வர் பாரத பிரதமரை சந்தித்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார் என்று கூறினார்.

Views: - 609

0

0