ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து சிலம்ப ஊர்வலம்…. அனைவரும் தடுப்பூசி போடவேண்டும் என்பதை வலியுறுத்தியும் பேரணி….

Author: Udhayakumar Raman
20 September 2021, 1:56 pm
Quick Share

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிலம்பம் பயிற்சி பெற்றவர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்ததைத் தொடர்ந்து அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் மேலும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் இன்று சிலம்ப பேரணி நடைபெற்றது. தமிழகத்தில் கொரோணா இரண்டாவது அலை வேகமாக பரவி வந்த நிலையில் தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் நோய் தொற்று பரவாது கட்டுப்படுத்தப்பட்டது. இருந்தபோதிலும் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் அடிப்படையில் மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் மாவட்டம் தோறும் ஒரு லட்சம் தடுப்பூசி என்று இலக்கு நிர்ணயித்து அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்ட நிலையில் அந்த முகாமில் கலந்து கொள்ள முடியாத நபர்களுக்காக இன்று மாநிலம் முழுவதும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதனடிப்படையில் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த விதைகள் அகாடமி சார்பில் சிலம்பப் பயிற்சி பெறும் மாணவ –மாணவிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக வந்து தங்களின் திறமையை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி சிலம்ப பேரணி நடத்தினர்.

மேலும் விளையாட்டு ஒதுக்கீட்டில் சிலம்பம் கற்றவர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததன் அடிப்படையில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிலம்பம் மட்டுமல்லாமல் அதுதொடர்பான விளையாட்டுகளை செய்தவாறு பொதுமக்களிடம் பாரம்பரியக் கலைகளை வளர்க்கும் விதமாகவும் பேரணியாக சென்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற பேரணி தாலுகா அலுவலகம் முன்புநிறைவு பெற்றது. பேரணியில் பங்கேற்ற மாணவ மாணவிகள் தங்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தியது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

Views: - 117

0

0