இட்லி சரியில்லை என்று கூறிய வாடிக்கையாளரிடம் கடை உரிமையாளர் வாக்குவாதம்: சமூகவலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ…!!!

Author: kavin kumar
31 October 2021, 4:56 pm
Quick Share

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகரில் சைவ உணவகத்தில் இட்லி சரியில்லை என்று கூறிய வாடிக்கையாளரிடம் கடை உரிமையாளர் வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது:-

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகர் கச்சேரி சாலையில் பிரபல சைவ உணவகம் (ஐயப்பன் காபி ஹோட்டல்); உள்ளது. சாதாரண கட்டடத்தில் இயங்கும் இந்த உணவகத்தில் விலைப்பட்டியலைப் பார்க்காமல் புதிதாக சாப்பிட செல்பவர்களுக்கு தலைச்சுற்றிப்போகும். அந்த அளவுக்கு சொகுசு ஓட்டல்களை விட அதிக விலைக்கு இங்கு உணவு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், அடித்தட்டு மற்றும் நடுத்தரவர்க்கத்து மக்கள் இந்த ஓட்டலின் பக்கம் செல்வதையே தவிர்த்துவிட்டனர். இந்த உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் உணவு சரியில்லை என்று உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. வாடிக்கையாளர் தான் சாப்பிடும் இட்லியில் சூடு இல்லை என்றும் இட்லி கல்லைப் போன்று உள்ளதாகவும், தரமாக இல்லை என்றும் கடையின் உரிமையாளரிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த கடையின் உரிமையாளர் சாப்பிட பிடிக்கவில்லை என்றால் வைத்து விடுங்கள், இட்லி நன்றாகத்தான் உள்ளது என்று கூறி வாடிக்கையாளர் கையில் வைத்திருந்த இட்லியை பிடுங்கி இலையை எடுத்து சென்று குப்பை தொட்டியில் போட்டுள்ளார். இதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகாரியைப் போல் எங்களை மிரட்டக் கூடாது என்றும், பிடிக்கவில்லை என்றால் கடையைவிட்டு வெளியே செல்லுங்கள், புகார் வேண்டுமானாலும் கொடுத்துகொள், உன் மிரட்டலுக்கு நான் ஆள் இல்லை என்று வாடிக்கையாளரிடம் உரிமையாளர் வாக்குவாதம் செய்தார். உணவுத்துறை அதிகாரிகளை அழைத்து வருவதாக வாடிக்கையாளர் கூறிச்சென்றார். மயிலாடுதுறை ஐயப்பன் காபி ஹோட்டலில் 2 இட்லி 30 ரூபாய். ஆனால், இட்லி வேகவில்லை என்று சொன்னால் மிரட்டல் கிடைக்கும். தேவையானவர்கள் அணுகவும் என்ற பின்குறிப்போடுஇந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Views: - 182

0

0