விதிமுறைகளை பின்பற்றாமல் செயல்படும் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

5 May 2021, 10:31 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் தொற்று ஏற்படக் கூடிய வகையில் செயல்படும் தனிநபர்கள் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அபராதமும் விதிக்கப்படும். என மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் குறித்தும் படுக்கை வசதிகள் குறித்தும் ஆக்சிஜன் அளவுகள் குறித்தும் மருத்துவ மனை அதிகாரிகளுடன் தீவிர ஆய்வில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசு அறிவித்துள்ள கொரோனா விதிமுறைகளை அனைத்து மக்களும் கடைபிடிக்க வேண்டும் என்றும்,

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் நோய் தொற்று அதிகரிக்கும் வகையில் செயல்படும் தனிநபர்கள் வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1558 படுக்கைகள் உள்ளதாகவும், இதில் 613 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டதாகவும், இவற்றில் 466 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 147 படுக்கைகள் காலியாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 375 படுக்கைகள் சிகிச்சைக்காக உள்ளதாகவும்,

‘இதில் 250 படுக்கைகள் மேலும் 50 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டதாக மாற்றப்பட்டுள்ளதாகவும் புதிய கட்டிடத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் 250 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் வைக்கப்பட உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும் 6000 லிட்டர் அளவு கொண்ட ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருவதாகவும், மூன்று நாளைக்கு ஒருமுறை நிரப்பட்டு வந்த நிலையில் தேவை அதிகமானதால் தற்போது ஒன்றரை நாளில் தீர்ந்து விடுவதாகவும், அதனால் உடனுக்குடன் ஆக்சிஜன் நிரப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும்,

ஆக்ஸிஜன் கசிவு ஏற்படாத வகையில் ஆக்ஸிஜன் செல்லும் குழாய்களை மருத்துவமனை அதிகாரி மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்து கொள்ள அரசு உத்தரவு அளித்துள்ளதாகவும் அதன்படி ஓரிரு வாரங்களில் செவிலியர்கள் தேவைக்கேற்ப பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்றும், ரெமிடிசிவர் மருந்து நாள்தோறும் தமிழக அரசின் சுகாதாரத் துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார். ஆய்வின்போது மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் ஜீவா மருத்துவமனை கண்காணிப்பாளர் கல்பனா மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Views: - 41

0

0