மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து போராட்டம்: காவல்துறை தடுத்ததால் தள்ளு – முள்ளு

Author: kavin kumar
13 October 2021, 7:31 pm
Quick Share

திருவாரூர்: திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறை தடுத்ததால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளு – முள்ளு ஏற்பட்டது.

திருவாரூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சீர் கேட்டை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மருத்துவமனை நோக்கி ஊர்வலம் நடைபெற்றது. மருத்துவமனை அருகில் சென்றதும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. காவல்துறையின் தடுப்புகளை மீறி சென்று மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் அத்தியாவசிய மருந்துகள் வெளியில் வாங்கி வரும் சூழ்நிலை உள்ளதாகவும்,

கொரோனா வார்டில் செவிலியர் மட்டுமே பணியாற்றுவதாகவும், மருத்துவர் இல்லை எனவும், பிணவறையில் பணியாற்றும் ஊழியர்கள் குழந்தைகள் வார்டிலும் பணியாற்றுவதாகவும், கழிவறைகள் முற்றிலும் தரமற்று உள்ளது என்றும் முற்றுகையின் போது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. அப்போது மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் மாணவர் சங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் மருத்துவ மனையின் சீர்கேட்டை சரி செய்து , கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து
முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. இதில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 208

0

0