இயந்திர அறுவடைக்கு மாறத் தொடங்கிய கரும்பு விவசாயிகள்

20 January 2021, 4:56 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் கரும்பு வெட்டுவதற்கு ஆள் பற்றாக்குறையால் தவித்த கரும்பு விவசாயிகள் தற்போது இயந்திர அறுவடைக்கு மாறத் தொடங்கியுள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் கோபாலபுரம் கிராமத்தில் சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலைகளாலும் அரைத்து முடிக்க முடியாத அளவுக்கு தருமபுரி மாவட்டத்தில் ஒரு காலத்தில் கரும்பு சாகுபடி அதிக பரப்பு இருந்தது. பிற்காலத்தில் அது படிப்படியாக குறைந்து ஆலைகளின் தேவையில் 50 சதவீதத்தை கூட நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. நடப்பு ஆண்டில் கோபாலபுரம் சர்க்கரை ஆலையில் மட்டுமே அரவை தொடங்கப்பட்டுள்ளது. அந்த ஆலையின் ஓராண்டு அரவை பருவத்துக்கு சுமார் 4 லட்சம் டன் கரும்பு தேவை. ஆனால், நடப்பு ஆண்டில் இந்த ஆலைக்கு 1.30 லட்சம் டன் அளவு வரை மட்டுமே கரும்பு வழங்க முடியும் என நிலை உள்ளது.

இதற்கு காரணம், மழை குறைவால் சாகுபடி பரப்பு குறைந்தது மட்டுமன்றி, கரும்பு அறுவடைக்கான கூலி உயர்வு மற்றும் கடும் ஆள் பற்றாக்குறையும் தான். இந்நிலையில் பல்வேறு காரணங்களால் கரும்பு வெட்டுக்கான ஆட்கள் குறைந்து விட்டனர். இந்த சூழலால் ஆண்டு முழுக்க சிரமப்பட்டு வளர்த்த கரும்பை உரிய பருவத்தில் விவசாயியால் அறுவடை செய்ய முடிவதில்லை. பருவம் கடந்தால் கரும்பு பூ விட தொடங்கி கரும்பின் எடை, சர்க்கரை திறன் ஆகியவையும் குறையும். இதனால் ஏற்படும் பொருளாதார இழப்பு, ஆள் பற்றாக்குறையால் அதிக கூலி வழங்கி கரும்பை அறுவடை செய்வதால் ஏற்படும் இழப்பு, கரும்புக்கான விலையை பல ஆண்டுகளாக அரசு உயர்த்தாமலே இருப்பது போன்றவற்றால் கரும்பு விவசாயிகள் பலர் மாற்றுப் பயிருக்கு சென்று விட்டனர்.

இந்நிலையில், அறுவைக்கு ஆட்கள் கிடைக்காத காரணத்துக்காக கரும்பு விவசாயத்தை கைவிட்ட விவசாயிகள் மத்தியில் இயந்திரம் மூலம் கரும்பு வெட்டும் வழிமுறைகளை ஆலை நிர்வாகத்தினர் விவசாயிகளுக்கு தெளிவுப்படுத்தினர். தொடர்ந்து ஆலை நிர்வாகத்தின் அறிவுறுத்தல் படி, நான்கரை அடி இடைவெளியில் பார் அமைத்து, இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை செய்யும் வகையில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது கரும்பு வெட்டும் பணி முதன்முறையாக தருமபுரி மாவட்டத்தில் இயந்திரம் மூலம் வெட்டப்படுகிறது. கரும்பை இயந்திரம் மூலம் வெட்ட ஒரு 1 டன் கரும்புக்கு ரூ.575 வீதம் வெட்டுக் கூலி, ஆனால் ஆட்கள் மூலம் வெட்டினால் டன்னுக்கு ரூ.750 முதல் ரூ.1000 வரை கூலி வழங்க வேண்டும்.

ஒரு ஏக்கர் வெட்டி முடிக்க சுமார் 4 நாட்கள் தேவை. கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு அறுவடை இயந்திரம் மிகவும் பயனளிப்பதாக உளளாதாக தெரிவிக்கின்றனர். மேலும் வயல்கள் பெரிய அளவில் இருந்தால் அறுவடை மிக வேகமாக முடியும். ஒரு நாளில் இந்த இயந்திரம் அதிகபட்சமாக 250 டன் வரை கரும்பு அறுவடை செய்யும். அதனுடன் சேர்ந்த பிரத்தியேக டிராக்டரில் விழும் கரும்பு லாரிகளில் ஏற்றப்பட்டு ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் இயந்திரம் மூலம் வெட்டப்படுவதால், மறு பயிர்(கட்டைக்கால்) சாகுபடியில் எந்த பாதிப்பும் இல்லை. எனவே இயந்திரம் மூலம் கரும்பு வெட்டுவதால், விவசாயிகளுக்கு இலாபம் இருக்கிறது. இயந்திரம் தரும் நம்பிக்கையால் வரும் காலங்களில் தருமபுரி மாவட்டத்தில் கரும்பு சாகுபடி பரப்பு கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Views: - 1

0

0