வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி குறித்து விளக்கிய தமிழிசை செளந்தரராஜன்

Author: kavin kumar
7 November 2021, 6:29 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களின் வீடுகளுக்கே சென்று நோயின் தாக்கம் குறித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விளக்கி 30 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

புதுச்சேரியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக முகாம்கள் நடத்தப்பட்டதன் மூலம் இதுவரை 90% மேல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் மேலும் மீதமுள்ள 10 % நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் 100% தடுப்பூசி செலுத்திய மாநிலமாக புதுச்சேரியை மாற்றும் விதமாக முத்தியால்பேட்டை மற்றும் கருவடிக்குப்பம் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களின் வீடுகளுக்கே சென்ற முதற்கட்டமாக துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆய்வு செய்தார் மேலும் தடுப்பூசி செலுத்துக்கொள்ளாத காரணம் குறித்து கேட்டறிந்த அவர் தடுப்பூசியின் அவசியம் குறித்து விளக்கி 30 க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசியை செலுத்த வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், புதுச்சேரியில் இதுவரை ஒன்றரை லட்சம் நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத நிலையில் அவர்கள் அவசியமாக போட்டுக் கொள்ள வேண்டும் என்றும், எதிர்காலத்தில் கொரோனா எந்த உருவில் நம்மை தாக்கும் என்று கூற முடியாது. துணைநிலை ஆளுநராக மட்டுமல்லாமல் ஒரு மருத்துவராகவும் இதைக் கூறுகிறேன். எதிர்காலத்தில் எந்த திட்டத்திற்கு வேண்டுமானாலும் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான ஆவணம் கேட்கப்படலாம். அதற்காக அப்போது மக்கள் வருத்தப்பட வேண்டாம் என்பதற்காக கூறுகிறேன் என தெரிவித்த அவர்,கடுமையான மழை பெய்தால் அதை எதிர்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு செய்து வருகிறது என்றார்.கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ரத்த அழுத்த பரிசோதனை செய்த பின்னர் தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 293

0

0