மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா: தண்டோரோ போட்டு முழு ஊரடங்கை கொண்டுவந்த ஊராட்சி மன்ற தலைவர்…

19 August 2020, 4:58 pm
Quick Share

அரியலூர்: இரும்புலிக்குறிச்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மக்களை காக்க தனது கிராமத்தில் முழு ஊரடங்கை கொண்டு வந்துள்ள ஊராட்சி மன்ற தலைவரின் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனையடுத்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சுகாதார துறையினர் மற்றும் கொரோனா தடுப்பு கண்காணிப்பு குழுவினர் இரும்புலிக்குறிச்சி கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

பாதிக்கப்பட்டவர்களின் தெருக்கள் மற்றும் சாலைகளை மூட வேண்டும் என்று ஊராட்சி மன்றத்தலைவரிடம் கூறியுள்ளனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ் தெருக்கள் சாலைகளை மூடுவதற்கு பதிலாக ஒட்டுமொத்தமாக கிராமத்திற்கே பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறியுள்ளார். இதன்பேரில் முதல்கட்டமாக இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் இயங்கும் அனைத்து கடைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களும்  3 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் அவசியமில்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், முககவசம் அணியாமல் ஊரில் நடமாடினால் 100 ரூபாய் அபராதம் என்று தண்டோரா மூலம் கிராமம் முழுவதும் அறிவிப்பு செய்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மக்களை காக்க தனது கிராமத்தில் முழு ஊரடங்கை கொண்டு வந்துள்ள ஊராட்சி மன்ற தலைவரின் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Views: - 1

0

0