டாஸ்மாக் ஊழியரை பீர் பாட்டிலால் குத்தி தாக்கி பணம் வழிப்பறி: 3 பேர் கொண்ட வழிப்பறி கும்பலுக்கு வலைவீச்சு

26 January 2021, 1:53 pm
Quick Share

திருப்பூர்: தாராபுரம் அருகே நள்ளிரவில் விற்பனை தொகையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த அரசு டாஸ்மாக் மதுபான கடை ஊழியரை பீர் பாட்டிலால் குத்தி தாக்கி ரூ1.13 லட்சம் ரொக்கப் பணம் வழிப்பறி செய்த 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புறநகர் பகுதியான தச்சன்புதூர் செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. சத்தியமங்கலம் அருகே உள்ள மேச்சேரி யைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் டாஸ்மார்க் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். நேற்று 25ஆம் தேதிஇரவு வழக்கம்போல கடையின் விற்பனையை முடித்து கடையை பூட்டிவிட்டு விற்பனைத் தொகை ரூ ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 310 ரூபாயுடன் தனது இருசக்கர வாகனத்தில் தாராபுரம் நோக்கி வந்துகொண்டிருந்தார்.

அப்போது தச்சன்புதூர் பொள்ளாச்சி சாலை சந்திப்பு அருகே வரும்போது நள்ளிரவில் சேல்ஸ்மேன் சிவக்குமாரை வழிமறித்த மூன்று பேர் கொண்ட வழிப்பறி கும்பல் தங்கள் கையில் வைத்திருந்த பீர் மற்றும் பிராந்தி பாட்டில்கள் ஆல் சிவக்குமாரை தாக்கி கீழே தள்ளி அவர் வைத்திருந்த ரூ ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 310 ரூபாயை பையுடன் பறித்துச் சென்று தலைமறைவாகினர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், சேல்ஸ்மேன் சிவகுமார் செல்போன் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து,

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சிவக்குமாரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதைதொடர்ந்து சம்பவம் நடந்த பகுதிக்கு நேரில் வந்த போலீசார் விசாரணை நடத்தி மூன்று பேர் கொண்ட வழிப்பறி கும்பலை தேடி வருகின்றனர். 26 ஆம் தேதி குடியரசு தினம் முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் 25ஆம் தேதி கடையின் விற்பனை வழக்கத்தை விட இரு மடங்கு அதிகம் இருக்கும் என்பதும், இதனை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்த வழிப்பறி கும்பல் துணிகர செயலை நடத்தியிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ள நிலையில்,

இதேபோல் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கவுண்டையன் வலசு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடைக்குச் சென்று அங்கிருந்த விற்பனையாளரை தாக்கி கண்களில் மிளகாய்ப் பொடி வீசி ரூ இரண்டு லட்சத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர் என்பதும், நேற்று 25 ஆம் தேதி மாலை தாராபுரம் பழைய வீட்டுவசதி வாரிய பகுதியில் சாலையில் நடந்து சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியை கழுத்தில் இருந்த 7 சவரன் தாலிக்கொடியை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் பறித்துச் சென்ற சம்பவமும் குறிப்பிடத்தக்கது.

டாஸ்மார்க் கடை ஊழியர்களை குறிவைத்து நடத்தப்பட்டுவரும் இவ் வழிப்பறி சம்பவம் டாஸ்மாக் கடை ஊழியர்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 6

0

0