மாவட்டம் முழுதும் சைக்கிளில் சென்று 2 நாளில் 5000 மரக்கன்று நட்டிய சாதனை: மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

Author: Udhayakumar Raman
14 September 2021, 4:32 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் முழுதும் சைக்கிளில் சென்று 2 நாளில் 5000 மரக்கன்று நட்டிய சாதனை புரிந்த மாணவர்களை மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து பதக்கங்களை அணிவித்தார்.

விருதுநகர் மாவட்டம்,  சிவகாசி அருகே கல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணியம்- கலைச்செல்வி ஆகியோரது மகன்கள் அருண் மற்றும் ஸ்ரீகாந்த், பொறியியல் பட்டம் பெற்றுவிட்டு தற்போது முழு நேர சமூக சேவையாக பசுமை இந்தியாவை உருவாக்கும் நோக்கில் ,  முதல் கட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் – கல்லூரிகள் மருத்துவமனைகள் – அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் கோயில்கள் மற்றும் கிராமங்களில் உள்ள வீடுகள் என பல்வேறு இடங்களில் சைக்கிளில் சென்று மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்தாண்டு சைக்கிளிங் பார் ரீசைக்கிளிங் என்ற திட்டத்தின்படி கன்னியாகுமரியிலிருந்து மும்பை வரை சுமார் 2000 கிலோ மீட்டர்,  11 நாட்களில் பயணித்து இருவரும் பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் சாதனை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் தற்போது இடம் பெற்றுள்ளது. இன்று சாதனை சகோதரர்கள் இருவரையும் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து பதக்கங்களை அணிவித்தார். மேலும் மாவட்ட நிர்வாகத்தால் நடைபெற்று வரும் மாபெரும் மரக்கன்றுகள் நடும் பணியில், அவர்களை இணைந்து செயல்பட ஆட்சியர் ஆலோசனை வழங்கினார்.

Views: - 118

1

0