இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போன சிறுவன் ஏரியில் சடலமாக மீட்பு
Author: kavin kumar27 August 2021, 7:27 pm
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போன நான்காம் வகுப்பு மாணவன் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பூ.மாம்பாங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தவ்ஹீத் ஆலம். இவரது 9 வயது மகன் முகமதுசாகிப் என்ற சிறுவன் உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், தற்போது பெருந்தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முகமதுசாகிப் நேற்று முன்தினம் அங்குள்ள தெருக்களில் விளையாடிக் கொண்டிருந்தார். இரவு நேரமாகியும் சிறுவன் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் அந்த கிராமத்தில் பல இடங்களில் தேடிப்பார்த்தும் முஹம்மதுசாகிப் கிடைக்கவில்லை.
இதையடுத்து முஹம்மதுசாகிப்பை காணவில்லை எனக்கூறி அவரது பெற்றோர் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று முகமதுசாகிப் பூ.மாம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில் சடலமாக கிடந்ததாக அந்தப்பகுதியில் நேரில் பார்த்தவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் முஹம்மதுசாகிப் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
0
0