வன உயிரின கடத்தல் மற்றும் அழித்தல் தடுப்பதற்காக சி.பி.சி.ஐ டி போலீசாருக்கு அதிகாரம் வழங்க கோரிய வழக்கு: மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு…

3 September 2020, 3:59 pm
Quick Share

மதுரை: வன உயிரின கடத்தல் மற்றும் அழித்தலை தடுப்பதற்காக, தமிழக காவல் துறையில் சி.பி.சி.ஐ டி போலீசாருக்கு அதிகாரம் வழங்க கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் அதலையை சேர்ந்த புஷ்பவனம் உயர் நீதி மன்ற மதுரைக் கிளையில் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழகத்தில், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், அரிய வகை உயிரினங்கள், விலங்குகள், மரங்கள் போன்றவை உள்ளன. குறிப்பாக 229 வகையான அரிய இன மரங்கள், 31 வகையான பாலூட்டி வகைகள், 15 வகையான பறவைகள், 43 வகையான ஊர்வன போன்ற அரிய வகை உயிரினங்கள் காணப்படுகின்றன. இவை சமீப காலமான பணத்திற்காக ஆசைப்பட்டு பலரும் கடத்துவதும், அழிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது போன்ற செயல்களால், தட்ப வெட்ப நிலை மாற்றமடைவதுடன், புவி வெப்பமயமாதலும் அதிகரித்து வருகிறது. இது குறித்து யுனெஸ்கோ போன்ற அமைப்புகளும் எச்சரித்து வருகிறது. இந்த நிலையில், தமிழக வனப் பகுதிகளிலும் இது போன்ற அரிய வகை உயிரினங்கள் அழிக்கப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க வனத்துறை பாதுகாவலர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர். இவர்களால் இது போன்ற குற்றங்களை தடுத்து நிறுத்த இயலாது.எனவே, கர்நாடகா, அசாம் போன்ற மாநிலங்களில் உள்ளது போல், தமிழக காவல் துறையிலும், சி.பி.சி.ஐ.டி போலீஸ் பிரிவில் வனப்பாதுகாப்பிற்கென ஒரு பிரிவை உருவாக்க வேண்டும்.

இதில் அனைத்து காவல் நிலையங்களில் இத்தகைய வனக் குற்றங்களை விசாரிப்பதற்கென்று ,எஸ்.ஐ. அந்தஸ்திலான அதிகாரியை நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து மத்திய ,மாநில அரசு வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 7 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Views: - 7

0

0