ஸ்டெர்லைட் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி:தலைமை செயல் அதிகாரி பங்கஜ் குமார் பேட்டி

18 August 2020, 9:57 pm
Quick Share

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாகவும், ஒரு லட்சம் மக்களின் வேலைவாய்ப்பு பறிபோய் உள்ளதாகவும் ஆலையின் தலைமை செயல் அதிகாரி பங்கஜ் குமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் ஆலையை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தைத் தொடா்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 போ் பலியாகினா். இதனைத் தொடா்ந்து தமிழக அரசு ஆலையை மூடியது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ஆலை நிர்வாகத்தின் சார்பில், சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆலையைத் திறக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. ஆலையைத் திறக்க எதிா்ப்புத் தெரிவித்து மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, உள்ளிட்ட பலா் வழக்குத் தொடா்ந்திருந்தனா்.

இந்த வழக்கை உயா்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்து வந்தனா். இந்நிலையில் இந்த வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று காணொலி காட்சி மூலம் பிறப்பித்தனர். அப்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று கூறி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில் இந்த ஆலை அடுத்து மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பாக ஆலையின் தலைமை செயல் அதிகாரி பங்கஜ் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “உயர்நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இந்த தீர்ப்பால் 50 ஆயிரம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. ஒரு லட்சம் மக்களின் வேலை வாய்ப்பு பறி போய் உள்ளது. நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதம் உற்பத்தி செய்து வந்தோம்.உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஊழியர்கள், ஒப்பந்தார்கள், லாரி உரிமையாளர்கள் அனைவருக்கும் வருத்தம் அளிக்க கூடிய வகையில் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

25 ஆண்டுகளாக எந்த பிரச்சினையும் இன்றி ஸ்டெர்லைட் இயங்கி வந்திருக்கிறது. ஆலை வலுவான காரணங்கள் இன்றி மூடப்பட்டதை மற்ற முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள். ஆலை மூடப்பட்டிருப்பதால் தூத்துக்குடி மாவட்ட வர்த்தகத்தில் ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆலை மூடப்பட்டிருப்பதால் அதிகளவில் தாமிரத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டி உள்ளது. இந்தத் தீர்ப்பு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஆயிரக் கணக்கான சிறுசிறு வணிகங்கள், தொழில்முனைவோர், இந்த ஆலையின் இயக்கத்தைச் சார்ந்துள்ள சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர் ஆகியோருக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஆலையின் இயக்கத்தின்போது பாதுகாப்பான, சூழல் சார்ந்த வலிமையான இயற்கை இருக்க வேண்டும் என்பதை உறுதியாக நம்புகிறோம். எங்களது ஆலையின் இயக்கத்துக்கு எதிராக உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்புவதற்காக சில தரப்பினரின் சில சம்பவங்களை வைத்தும், அரைகுறை உண்மைகளை வைத்தும் வேண்டுமென்றே இப்படித்தான் என்று நம்புகிற நிலையால் நாங்கள் ஊக்கம் இழந்துள்ளோம். தாமிர உலோகத்துக்கு பகையுள்ளம் கொண்ட நமது அண்டை நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிர்பந்தம் நம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் தாமிர உற்பத்தியில் சொந்தக் காலில் நிற்கும் நம் நாட்டின் திறமையைச் சில சக்திகள் சிதைப்பதற்கு இப்படி சதி செய்கிறார்கள். ஆலையின் இயக்கத்தினால் எந்தத் தருணத்திலும் மாசு குறித்த கவலை ஏற்பட்டதாக உரிய அதிகாரிகள் கூறியதில்லை. வரும் காலங்களில் நீதியை நிலைநாட்டுவதற்காக இருக்கும் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடர்ந்து செயல்படுவோம். தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகு சட்ட வல்லுநர்களோடு ஆய்வு செய்த பின்பு அடுத்த கட்ட நகர்விற்கு செல்வோம் என்றார்.