மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றி வீடு அபகரித்த குடும்பத்தினர்

4 November 2020, 7:22 pm
Quick Share

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றிய அபகரித்த வீட்டை குடும்பத்தினரிடம் இருந்து மீட்டுத்தரக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மாற்றுத்திறனாளி பெண் கண்ணீர் மல்க மனு அளித்தார்.

தூத்துக்குடி சுந்தரவேல் புரத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 39). இரண்டு கால் நடக்க இயலாத மாற்றுத்திறனாளி. பிகாம் பட்டதாரியான இவர், பத்திர பதிவு அலுவலகம் மற்றும் தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் தட்டச்சராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சுந்தரவேலுபுரத்தில் வீடு ஒன்றை விலைக்கு வாங்குவதற்காக முத்துலட்சுமியின் தந்தை மற்றும் அவருடைய உடன்பிறந்த சகோதரர் இவரிடம் பண உதவி கேட்டுள்ளனர்.

தந்தை மற்றும் சகோதரர் மீது இருந்த நம்பிக்கையின் அடிப்படையிலும் பாசத்தின் காரணமாகவும் தனது சுய சம்பாத்தியத்தில் சேர்த்து வைத்திருந்த நகைகள் மற்றும் வீடு ஆகியவற்றை விற்று பணத்தை கொடுத்துள்ளார். இதைக்கொண்டு சுந்தரவேலுபுரத்தில் அவருடைய தந்தையும், சகோதரனும் வீடு விலைக்கு வாங்கியுள்ளனர்.

விலைக்கு வாங்கிய புதிய வீட்டில் கீழ்ப்பகுதியில் முத்துலட்சுமியும், மேல் மாடியில் அவருடைய சகோதரனும் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்நிலையில் வீட்டை முழுவதுமாக அபகரிக்கும் நோக்கில் தந்தையும், சகோதரனுய்ங, முத்துலட்சுமியை கொடுமைப்படுத்த தொடங்கியதாக தெரிகிறது. அவரை அடித்து சித்ரவதை செய்ததுடன் வீட்டைவிட்டு வெளியேறியதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் இது குறித்து முத்துலட்சுமி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் இன்று புகார் மனு அளித்தார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவருக்கு ஆறுதல் கூறியதுடன் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நிவாரணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து முத்துலட்சுமி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Views: - 22

0

0