அரசு காப்பகத்தில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பியோடிய சிறுமி : ஆந்திராவுக்கு விரைந்தது தனிப்படை!!

Author: kavin kumar
7 October 2021, 1:33 pm
Minor Girl Escape -Updatenews360
Quick Share

தஞ்சை : காப்பகத்திலிருந்து சுவர் ஏறி குதித்து தப்பி சென்ற சிறுமியை தேடி தஞ்சாவூர் போலீசார் ஆந்திர மாநிலத்துக்கு விரைந்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 4ம் தேதி இரவு தஞ்சாவூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் மெயின் ரோடு பகுதியில் போலீஸ் வாகனம் சென்றபோது 12 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அவரை அழைத்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது தனது பெயர் கீதா என்றும் தனது தந்தை பெயர் ராமி ரெட்டி என்றும் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் நெல்லூர் என்றும் தெரிவித்தார்.

மேலும் வீட்டு வேலைக்கு செல்லும் படி குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதால்
ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வீட்டிலிருந்து தப்பி தஞ்சாவூருக்கு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த சிறுமியை மீட்ட போலீசார் தஞ்சை பெரிய கோயில் மேம்பாலம் அருகே இயங்கும் தமிழ்நாடு குழந்தைகள் காப்பகத்தில் குழந்தையை ஒப்படைத்தனர்.

கடந்த நான்கு மாதமாக காப்பகத்தில் அந்த சிறுமி தங்கியிருந்தார். அவருக்கு தமிழ் தெரியாது என்பதால் மற்ற சிறுமிகளிடம் பேசாமல் ஒதுங்கியே இருந்தார். இந்த நிலையில் காப்பக கண்காணிப்பாளர், விஜயா, வருகை பதிவேட்டை சரி பார்த்தபோது கீதா மாயமாகி இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து காப்பகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுமி கீதா காப்பகத்தின் மொட்டை மாடி வழியாக ஏறி, காம்பவுண்டு சுவரை தாண்டி குதித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து குழந்தைகள் காப்பகம் சார்பில் தஞ்சை தெற்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமி காப்பகத்தில் இருந்து தப்பி சொந்த ஊருக்கே சென்றாரா அல்லது வழியில் யாராவது கடத்தினார்கள் என்பது குறித்து விசாரிக்கின்றனர். மேலும் தனிப்படை யை சேர்ந்த ஒரு குழு ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு விரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 188

0

0