‘கையெடுத்து கும்பிட்டார் பிபின் ராவத்’: முப்படை தளபதியின் கடைசி நிமிடங்கள்…கண்கலங்கி உருகிய மீட்பு பணியினர்..!!

Author: Aarthi Sivakumar
11 December 2021, 5:37 pm
Quick Share

நீலகிரி: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் கடைசி நேரத்தில் கையெடுத்து கும்பிட்டார் என மீட்பு பணியில் ஈடுபட்டு இருந்த சிவகுமார் என்பவர் தெரிவித்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி என்ற பகுதியில் திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் பலியாகினர்.

பலியானவர்கள் உடல்கள் நேற்று முன்தினம் டெல்லி எடுத்துச் செல்லப்பட்டது என்பதும் பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவியின் உடல்கள் ஒரே தகனத்தில் வைத்து இறுதி சடங்கு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டபோது மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த சிவகுமார் என்பவர் சமீபத்தில் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். ஹெலிகாப்டர் விபத்து குறித்த கடைசி நிமிடங்களை பகிர்ந்து கொண்டார்.

அதில் பிபின் ராவத் அவர்களை நான் பார்த்தவுடன் என்னிடம் தண்ணீர் கேட்டார். நாங்கள் உங்களை கண்டிப்பாக காப்பாற்றி விடுவோம் என்று அவரிடம் சொன்னபோது அவர் கையெடுத்துக் கும்பிட்டார். ஆம்புலன்சில் ஏறுகிற வரை அவர் கையெடுத்து கும்பிட்டபடியே இருந்தார்.

அதன் பின்னர் மூன்று மணி நேரம் கழித்து இராணுவ அதிகாரிகள் அவர் இறந்துவிட்டார் என்று சொன்ன போது மிகவும் வேதனையாக இருந்தது என குன்னூரை சேர்ந்த சிவகுமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவரது, இந்த வீடியோ பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 794

0

0