தடுப்பூசி செலுத்தி கொண்ட அனைவருக்கும் பரிசு வழங்கிய ஊராட்சிமன்ற தலைவர்…

Author: Udhayakumar Raman
27 November 2021, 1:31 pm
Quick Share

விழுப்புரம்: புத்தூர் கிராமத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்ட அனைவருக்கும் பரிசுகளை ஊராட்சிமன்ற தலைவர் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம் அருகே உள்ளது புத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் நேற்று நடைபெற்ற கொரோனா சிறப்பு முகாமில் முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்டத்திலேயே 7000 அதிகமானோர் முதல் தடுப்பூசி கூட செலுத்தாமல் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பார்வையிட்டு அறிவுரை வழங்கினார். மேலும் ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைவரையும் அழைத்து சிறப்பு பரிசுகள், கண்கவர் திட்டங்கள் என அறிவித்து உடனடியாக தங்கள் பகுதிகளில் உள்ள முதல் தடுப்பூசி போடாத அனைவரையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என கூறியிருந்தார். மேலும், அவ்வாறு அனைவரும் முதல் தடுப்பூசி போட்டிருந்தால் அந்த கிராமத்திற்கு உடனடியாக அனைத்து திட்டங்களையும், திட்டங்களுக்கான நிதியையும் முன்னுரிமை அளித்து வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் புத்தூர் கிராமத்தில் சுமார் 87 பேர் முதல் தடுப்பூசி போடாமல் இருந்தனர். இதனை அடுத்து ஊராட்சி மன்ற தலைவர் பூரணி சிவராஜ் முதல் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் அனைவருக்கும் பரிசு வழங்கப்படும் எனவும், அதில் குலுக்கல் முறையில் ஒருவருக்கு 10 ஆயிரம் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு மொபைல் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். இதனை அடுத்து புத்தூர் கிராமத்தில் முதல் தடுப்பூசி செலுத்தாத 87 பேரும் நேற்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதன் மூலமாக 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக்கொண்ட கிராமமாக இலக்கை எட்டியுள்ளது.

இந்த நிலையில், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவித்தபடி, இன்று அங்கு உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முதல் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் குலுக்கல் முறையில் பூங்கொடி என்ற பெண்மணி சிறப்பு பரிசாக 10 ஆயிரம் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு மொபைல் பெற்றார். மேலும் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட 387 நபர்கள் மற்றும் முன் களப் பணியாளர்கள் உள்ளிட்ட 500 நபர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில், முகையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினார்.

Views: - 52

0

0