பால் டெலிவரி செய்ய சென்ற நபரை கத்தியால் வெட்டி செல்போன் மற்றும் பணம் பறிப்பு..
Author: kavin kumar7 October 2021, 2:54 pm
சென்னை: வேளச்சேரி அருகே பால் டெலிவரி செய்ய சென்ற நபரை கத்தியால் வெட்டி செல்போன் மற்றும் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வேளச்சேரி விஜயா நகர் அவ்வையார் தெரு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி வயது 25. சொந்தமாக மினி வேன் வைத்து பால் பாக்கெட்டுகளை டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். அதிகாலை 3 மணி அளவில் பால் பாக்கெட்டுகளை டெலிவரி செய்ய கொடுங்கையூர் எழில் நகர் வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது எழில் நகர் பகுதியில் ரயில்வே கேட் மூடப் பட்டிருந்ததால் அங்கு வாகனத்தை நிறுத்தி விட்டு வாகனத்திலேயே அமர்ந்திருந்தார். அப்போது திடீரென்று வந்த மூன்று பேர் மினி வேன் கண்ணாடிகளை உடைத்து உள்ளே அமர்ந்திருந்த பாலாஜியை சரமாரியாக வெட்டியுள்ளனர்.இதில் பாலாஜிக்கு தலை மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் பாலாஜி வைத்திருந்த 35,000 ரூபாய் மதிப்புள்ள செல்போன் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்து சென்றனர்.பாலாஜி ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.
அவ்வழியாக சென்றவர்கள் அவரை பார்த்து உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். இதில் சம்பவத்தில் ஈடுபட்டது ஏற்கனவே சில குற்ற வழக்கில் தொடர்புடைய நபர்கள் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து கொடுங்கையூர் குப்பை மேடு அருகே பதுங்கியிருந்த கொருக்குபேட்டை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா 22 , அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராம் 19 , புதிய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் ( எ) துப்பாக்கி வயது 20 ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் கொடுங்கையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
0
0