பட்டியல் இன பெண்களுக்கு எந்த விதமான பாதுகாப்பில்லை: இரா.முத்தரசன் குற்றச்சாட்டு

Author: Udayaraman
2 October 2020, 3:18 pm
Quick Share

திருச்சி: பா.ஜ.க ஆட்சியில் பட்டியல் இன பெண்களுக்கு எந்த விதமான பாதுகாப்பில்லை என திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றச்சாட்டியுள்ளனர்.

காந்தியடிகள் 152வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி அரசு மருத்துவமனை அருகே உள்ள மகாத்மா காந்தி அஸ்தி மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது:- நாடு மிகவும் மோசமான நிலையில், போய் கொண்டிருக்கிறது. உத்திர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணை காவல்துறையினரே எரித்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தை பார்க்க சென்ற ராகுல் காந்தியை கீழே தள்ளி உள்ளனர். நாடறிந்த ஒரு தலைவரை இப்படி காவல் துறையினர் தள்ளி விட்டது கண்டிக்கதக்கது.

தொடர்ந்து பட்டியலினத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு நாடு முழுவதுமே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.
கிராம சபை கூட்டத்தில் விவசாயிகளை நேரில் சந்தித்து வேளாண் சட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதற்கு பின் இரவோடு இரவாக கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது இது ஜனநாயக விரோத செயல். 70 சதவிகித மக்கள் விவசாயத்தை சார்ந்து உள்ளதாகவும், அவர்கள் போராட்டதை கொச்சைபடுத்துகிறார் பிரதமர். 12ம் தேதி மத்திய அரசு அலுவலகங்களில் முன்பாக மாபெரும் போராட்டம் நடத்த உள்ளோம். ராகுல் காந்தி வர போகிறார் என்ற பின் உடனடியாக அங்கு ஒரு மாதம் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

திமுக கூட்டணி கட்சிகள் வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் உதய சூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று நிர்பந்தம் செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக அதிகாரப்பூர்வமாக அப்படி எதையும் அறிவிக்கவில்லை. பத்திரிகைகள் தான் அப்படி கூறி வருகின்றனர். சின்னம் குறித்து திருமாவளவன் அவருடைய கட்சி குறித்து கூறி உள்ளார். இது கூட்டணிக்கு எதிரான கருத்து அல்ல. எங்கள் கூட்டணி பலமாக உள்ளது என்றார்.

Views: - 31

0

0