திருவண்ணாமலை தீப விழாவிற்கு திருக்குடை எடுத்து செல்லும் நிகழ்ச்சி
18 November 2020, 7:33 pmவேலூர்: திருவண்ணாமலை தீப விழாவிற்கு வேலூரிலிருந்து திருக்குடை எடுத்து செல்லும் நிகழ்ச்சி வேலூர் கோட்டை ஜலகண்டீஸ்வரர் ஆலயத்திலிருந்து துவங்கியது.
வேலூர் மாவட்டம்,வேலூர் கோட்டையிலுள்ள ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ அண்ணாமலை திருக்குடை சமிதி மற்றும் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தின் சார்பில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் வரும் 20 ஆம் தேதி துவங்கும் தீபத்திருவிழாவிற்காக திருக்குடை வைபவ விழா ஜலகண்டீஸ்வரர் ஆலயத்திலிருந்து புறப்பட்டது. மகா தேவமலை சித்தர் மகானந்த சித்தர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் திருக்குடை சமிதி ப்ரத்தியங்கரா தாசன் கோவில் செயலாளர் சுரேஷ் மற்றும் சாதுக்கள் சன்னியாசிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக திருக்குடை எடுத்து செல்லப்பட்டது. இந்த திருக்குடை நாளை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் ஒப்படைக்கப்படும் வழிமுழுக்க பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருவண்ணாமலை ஆலயத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் திருக்குடைகள் வேலூரிலிருந்து எடுத்து செல்வது இடையில் நிறுத்தப்பட்டது. மீண்டும் இரண்டு ஆண்டுகளாக திருக்குடை எடுத்து செல்லும் வைபவம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.