பக்தர்கள் இல்லாமல் நடைபெற்ற தூயபனிமயமாதா பேராலய 10-ம் நாள் திருவிழா…

5 August 2020, 10:08 pm
Quick Share

தூத்துக்குடி: தூத்துக்குடி தூயபனிமயமாதா பேராலய 10-ம் நாள் திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி நிறைவடைந்தது.

நாட்டின் புகழ்மிக்க கத்தோலிக்க கிறிஸ்தவ பேராலயங்களில் ஒன்றான தூத்துக்குடி புனித பனிமய மாதா ஆலயத்தின் ஆண்டுப்பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 5 ம்தேதி நடைபெறும். ஏழுகடல் துறை அடைக்கலத்தாய் என்று தூத்துக்குடி மக்களால் அன்போடு அழைக்கப்படும் பனிமய மாதா பேராலயத்தின் 438ம் ஆண்டுப் பெருவிழா இந்த ஆண்டும் கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடியின் திருவிழாவாக கொண்டாடப்படும் பனிமய மாதா பேராலயத்தின் ஆண்டுப்பெருவிழா பொதுமக்கள் பங்கேற்பின்றி கடந்த ஜூலை26 ம் தேதியன்று  கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் ஜெபமாலை, மறையுரை மற்றும் திருப்பலி நடைபெற்று வந்த  நிலையில் ஆண்டுப் பெருவிழாவின் நிறைவு நாளான  இன்று கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஆடம்பர கூட்டுத்திரும்பலி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது.

அப்பொழுது அவர் உரையில் தூய பனிமய மாதா அன்னை பக்தர்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்பதற்காக ஆசையோடு காத்திருக்கிறாள். ஆனால் பக்தர்களை காணோம்.   கரோனா வைரஸ் என்ற அரக்கன் அன்னைக்கும் நமக்குமான இடைவெளியை ஏற்படுத்தி விட்டானோ என்ற அச்சம், சந்தேகம் உணர்வு ஏற்பட்டிருக்கும். ஆனால் அது உண்மையில்லை  பனிமய அன்னை கரோனா அரக்கனை நிச்சயம் அழிப்பாள். கரோனாவை அழித்து நம்மை‌ காப்பதற்காக ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சமூக ஊடகங்கள் வழியே வந்து அருள் செய்கிறார் என பேசினார்.

தொடர்ந்து ஆலய பங்குதந்தை குமார் ராஜா மறையுரை நிகழ்த்தினார். மறைமாவட்ட முதன்மை குரு, பங்குதந்தைகள் மட்டுமே கலந்து கொண்டனர். திருவிழா நாட்களில் தினந்தோறும் சிறப்பு வழிபாடும், திருப்பலியும் நடைபெற்றது.
பேராலய திருவிழாவின் சிறப்பு திருப்பலி உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் உள்ளூர் தொலைகாட்சியிலும், யூடியூப்பிலும் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. விழாவின் இன்று மாலை நடைபெறும் பொன் மகுடம் தரித்த தூயபனிமயமாதாவின் திருவுருவ சப்பரப்பவனி கரோனா தொற்று காரணமாக நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தை பொறுத்தமட்டில் இத்திருவிழாவில் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் மட்டுமல்லாது இந்து மற்றும் இஸ்லாமிய பெருமக்களும் தூத்துக்குடி பனிமயமாதா பேராலய திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிப்பது வழக்கம்.‌ மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த திருவிழா இந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்பின்றி நிறைவடைந்தது சற்று ஏமாற்றத்தை அளித்தது. 

Views: - 12

0

0