மூன்று மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களும் இருப்பு வைப்பு: அமைச்சர் காமராஜ் பேட்டி

16 November 2020, 7:57 pm
Quick Share

திருவாரூர்: மூன்று மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை தேவைப்படும் இடங்களுக்கு கொண்டு செல்ல தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம்மன்னார்குடி அருகே தென்பரை கிராமத்தில் பாமணி ஆற்றின் இடையே செல்லும் பாலத்தை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் அதிக மழை பொழிவு பெறும் திருவாரூர் மாவட்டத்தில் பேரிடர் கால விபத்துக்களை தடுக்கும் நோக்கில் தமிழக அரசின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மன்னார்குடி அருகே தென்பரை முத்துப்பேட்டை சாலையை இணைக்கும் பாமணி ஆற்றின் நடுவே செல்லும் பாலம் மற்றும் ஆற்றில் நீர் செல்லும் அளவினை உணவுத்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் நீர் மேலாண்மை மற்றும் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் காமராஜ் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது கோட்டாட்சியர் வட்டாட்சியர் நீர் மேலாண்மை துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் காமராஜ் பேசுகையில், “வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழக முதல்வரின் உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு வெள்ள அபாயத்தை தடுத்திடும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் ஒரு லட்சம் காலி சாக்கு பைகள் 16 ஆயிரம் மணல் நிரப்பப்பட்ட மூட்டைகள் 430 கன மீட்டர் அளவு மணலும் சவுக்கு கட்டைகள் உள்ளிட்டவை தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார். மூன்று மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவை தேவைப்படும் இடங்களுக்கு கொண்டு செல்ல தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா தமிழகத்திற்கு வருவதையொட்டி அக்கட்சியின் மாநில தலைவர் கூறிவரும் கருத்துக்கள் அதிமுகவை விமர்சிப்பதாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா குறித்து விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மு.க. ஸ்டாலின் அவர்கள் பேரம் பேசும் நினைவிலேயே ஏதாவது ஒன்றைக் கூறி வருவதாகவும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

Views: - 23

0

0