அருள் தந்த அவிநாசிலிங்கேஸ்வரர் : பக்தர்கள் பக்தி பரவசம்!!

1 September 2020, 2:13 pm
Avinashilingesh - Updatenews360
Quick Share

திருப்பூர் : ஐந்து மாதங்களுக்குப் பிறகு அவிநாசிலிங்கேசுவரர் கோயில் இன்று திறக்கப்பட்டதால் பக்தர்கள் பரவசத்துடன் வழிபாடு நடத்தினர்.

நாயன்மார்களால் பாடல்பெற்றதும், பழமை வாய்ந்ததுமான திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேசுவரர் கோயில் கொரோனா பெருந்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இருந்த போதிலும் அரசு வழிகாட்டுதல் படி நாள்தோறும் சிவாச்சாரியர்கள் கால பூஜைகளை மேற்கொண்டுவந்தனர்.

இந்நிலையில் ஊரடங்கு தளர்வாக இன்று முதல் கோயில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்காக வழிகாட்டுதல் நெறிமுறைப்படி திறக்கப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதையடுத்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு இன்று அவிநாசிலிங்கேசுவரர் கோயில் பக்தர்கள் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது.

தமிழக அரசு அறிவுறுத்தலின்படி இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு கால பூஜைகளை சிவாச்சாரியர்கள் மட்டும் மேற்கொண்டனர். தொடர்ந்து காலை 7 மணி முதல் பக்தர்கள் வழிபாட்டிற்காக அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து பெண்கள் குழந்தைகள் என பக்தர்கள் பக்திப்பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

பகல் 1 மணிவரையும் மீண்டும் மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் மட்டும் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படுவர் என்றும், கோயிலில் அர்சனை செய்வதோ, பிரசாதங்கள் வழங்குவதோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஐந்து மாதங்களுக்குப் பின் கோயில் திறக்கப்பட்டதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கொரோனா அச்சுறுத்தலையும் தாண்டி ஆவலுடன் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என அனைத்து வயதினரும் சாமி தரிசன் செய்தனர்.

Views: - 7

0

0