பெரிய ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்: அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை…

Author: kavin kumar
12 January 2022, 5:04 pm
Quick Share

காஞ்சிபுரம்: இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழில் பூங்காவில் உள்ள கனரக வாகன முனையத்தில் உள்ள கழிப்பிடத்தின் கழிவுநீர் நேரடியாக காட்ராம்பாக்கம் பெரிய ஏரியில் கலப்பதால் நிலத்தடி நீர் மாசடைந்து சுகாதார கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிக தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக ஸ்ரீபெரும்புதூர் விளங்குகின்றது. ஸ்ரீபெரும்புதூர் ,ஒரகடம் ,இருங்காட்டுக்கோட்டை ,சுங்குவார்சத்திரம், வல்லம், தண்டலம், படப்பை, மணிமங்கலம் உள்ளிட்ட பகுதியில் மட்டும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு குறு தொழிற்சாலைகளும், உள்ளூர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் நிலத்தடி நீர் மாசு படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ராம்பாக்கம் கிராமத்தில் சுமார் 5000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தேவையான தண்ணீரை இந்தப் பகுதியில் உள்ள நான்கு ஏரிகளிலிருந்து பெறுகிறார்கள். இந்த கிராமத்தில் உள்ள நான்கு ஏரிகளில் 128 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காட்ராம்பாக்கம் பெரிய ஏரி மூலம் சுமார் 360 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஏரியின் ஓரத்தில் சுமார் 15 ஏக்கர் அளவு இடங்களை ஆக்கிரமித்து ஐநூற்றுக்கும் மேற்பட்ட கனரக வாகனங்களை நிறுத்துவதற்க்குண்டான கனரக வாகனம் முனையத்தை இருங்காட்டுக்கோட்டை சிப்காட் நிர்வாகம் அமைத்துள்ளது.

இந்த கனரக வாகன முனையத்திற்க்கு வருகின்ற ஓட்டுனர்களும் ,கிளீனர்களும் இந்த முனையத்தில் தங்கி இங்கு உள்ள கழிவரைகளில் காலைக்கடன்களை முடித்து விட்டு குளித்துவிட்டு செல்கின்றனர். இந்த கழிப்பிடத்திற்கு முறையான செப்டிக்டேங்க் வசதி இல்லாததால் அனைத்து மனித கழிவுகளும் , சோப்பு மற்றும் பிளாஸ்டிக் போன்ற கழிவுகளும் நேரடியாக காட்ரம்பாக்கம் பெரிய ஏரியில் கலக்கின்றது. இதனால் காட்ராம்பாக்கம் பெரிய ஏரி மாசுஅடைந்து நிலத்தடி நீர் கெட்டுப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ஏரி பாசனத்தை நம்பி உள்ள விவசாயிகளும் பாதிப்படைகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், மழைக்காலங்களில் இந்த ஏரி முழு கொள்ளளவை எட்டி இங்கிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்கின்றது. சென்னை வாழ் மக்களுக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி இதனால் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த மாசு அடைந்த மற்றும் கழிவுநீர் கலந்த நீரை குடிப்பதால் மக்களுக்கு பல உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என அப்பகுதி மக்கள் கருதுகிறார்கள். இது ஒருபுறமிருக்க கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் காட்ராம்பாக்கம் பெரிய ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கனரக வாகன தொழில் முனையத்தை அகற்ற வேண்டுமென்று வழக்கு தொடுத்து தடை ஆணையையும் பெற்றுள்ளார்கள்.

இந்த ஸ்டே ஆர்டரை மதிக்காமல் இருங்கட்டுக்கோட்டை சிப்காட் நிர்வாகம் செயல்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். நீர்நிலை பகுதிகளை மீட்போம் என கூறி நீர்நிலைகளில் கட்டப்பட்டுள்ள கோயில்களையும், கட்டடங்களையும் இடித்துத் தள்ளி வருகின்ற திமுக தலைமையிலான தமிழக அரசு காட்ராம்பாக்கம் ஏரியில் கட்டப்பட்டுள்ள கனரக வாகன தொழில் முனையத்தை ஏன் அகற்றவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Views: - 159

0

0