குற்றாலம் மெயினருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை..!!

20 February 2021, 4:03 pm
kutralam falls - updatenews360
Quick Share

நெல்லை: மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக ஜனவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்தது. மழை காரணமாக குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வெள்ளப்பெருக்கு காரணமாக அவ்வப்போது சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஜனவரி மாதம் இறுதியில் மழை ஓய்ந்த நிலையில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் பனிப்பொழிவும், பகல் நேரங்களில் கோடையை மிஞ்சிய வெயிலும் அடித்து வந்தது. ஒரு மாதத்திற்கு மேலாக இதே நிலை நீடித்து வந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் நேற்று சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக சிவகிரியில் 5 மில்லி மீட்டர் மழை பதிவானது.

இன்று காலை முதலே மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக ஆலங்குளம், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், சிவகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. ஒரு சில இடங்களில் பெய்த மழை காரணமாக சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. மலைப் பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இந்நிலையில் இன்று காலை மெயினருவியில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி இன்று காலை 10 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால் பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவிகளில் வழக்கம் போல குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Views: - 38

0

0