குற்றாலம் அருவிகளில் பெய்த கனமழை: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை…!!

22 February 2021, 4:54 pm
kutralam falls - updatenews360
Quick Share

நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் வீசும் வலுவான கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நெல்லையில் களக்காடு, நாங்குநேரி, பாளை, அம்பை உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது லேசான சாரல் பெய்தது.

papanasam-dam-updatenews360

கடந்த 2 நாட்களாக அணைப்பகுதிகளான பாபநாசம், சேர்வலாறு அணைப்பகுதிகளில் மட்டும் மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பாபநாசத்தில் 7 மில்லி மீட்டரும், சேர்வலாறு அணைப்பகுதியில் 2 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 121.45 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையில் 129.56 அடி நீர் இருப்பு உள்ளது. அணைகளுக்கு 780 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

அணைகளில் இருந்து பாசனத்திற்காக 604 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணை நீர் மட்டம் 109.30 அடியாக உள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாகவே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், புளியங்குடி, தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

manimutharu flood - updatenews360

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள பகுதிகளான சிவகிரியில் நேற்று மாலை சுமார் 2 மணிநேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் தேங்கியது. கோம்பையாறு, தலையணை உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்தது. நேற்று இரவு மட்டும் சிவகிரி பகுதியில் அதிகபட்சமாக 65 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணைப்பகுதிகளான கடனா, கருப்பாநதி, ராமநதி, குண்டாறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த திடீர் மழையால் பொதுமக்களும் ஆனந்தம் அடைந்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் ஆர்ச்சை தொட்டப்படி தண்ணீர் கொட்டியது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

Views: - 42

0

0