ரசாயன ஆலையில் இருந்து வெளியேறிய நச்சு புகை: அதிநவீன கருவிகள் கொண்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ஆய்வு…

Author: Udhayakumar Raman
6 August 2021, 6:58 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகேயுள்ள ரசாயன ஆலையில் இருந்து வெளியேறிய நச்சு புகையின் காரணமாக பொது மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து அதிநவீன கருவிகள் கொண்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சின்னையன் சத்திரம் அடுத்துள்ள சிங்கடிவக்கம் பகுதியில் சுமார் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். சிங்கடிவக்கம் அரசு பள்ளி அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வரும் தனியார் ரசாயன தொழிற்சாலை பராமரிப்பு இல்லாத காரணத்தினால் அவ்வப்போது ரசாயன கழிவுகள் உள்ளிட்டவை வெளியேறி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றசாட்டு வைத்துள்ளனர். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள், கடந்த 10 ஆண்டுகளாக அங்கு செயல்பட்டு வரும் ரசாயன ஆலையில் ரசாயன புகை மற்றும் ரசாயனக் கழிவுகள் வெளியேறுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனு அளித்துள்ளனர்.

இருந்தும் அந்த மனுவின் மீது மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ரசாயன ஆலையையொட்டி உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ரசாயன ஆலையில் இருந்து திடீரென்று ,வெளியேறிய புகையின் காரணமாக மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் மூச்சுத் திணறல் காரணமாக அவதிப்பட்டு உள்ளனர். இதனைத் தொடர்ந்து இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னை கிண்டி மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை சேர்ந்த அதிகாரிகள் அதிநவீன கருவிகள் கொண்டு காற்றில் கலந்துள்ள மாசு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வின் முடிவில் காற்றில் மாசு கலந்து உள்ளதா இல்லையா என்பது குறித்து தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 83

0

0