மதுரையில் விபத்தில் வளர்ப்பு பிராணிகள் இறக்கும் சோகம்

Author: Udhayakumar Raman
1 September 2021, 2:53 pm
Quick Share

மதுரை: மதுரை மாநகராட்சி சாலைகளில் மாடு, நாய் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் திரிந்தால், அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்த நிலையிலும், விபத்தில் வளர்ப்பு பிராணிகள் இறக்கும் சம்பவம் தொடர்வது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

மதுரை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், மாநகராட்சியில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, கடந்த ஜூலை 29 அன்று, சாலைகளில் வளர்ப்பு பிராணிகள் திரிவதை வரைமுறைப்படுத்தும் நோக்கில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதில், “இனி வீடுகளில் நாய், மாடு, ஆடு, குதிரை வளர்த்தால் அதற்கு மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.10 உரிமம் செலுத்த வேண்டும். இந்த உரிமத்தை பெற்று தங்களது வளர்ப்பு பிராணிகளை மாநகராட்சியில் பதிவு செய்ய வேண்டும். இந்த உரிமம் பெறதாவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதே போல் மாடு, ஆடு, குதிரைகளை சாலைகளில் கேட்பாரற்று விட்டால் அதற்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டு, அதனை பறிமுதல் செய்தபின்னர் தினமும் அதன் பராமரிப்புக்கு ரூ.100 வசூலிக்கப்படும். அதே போல் சாலைகளில் வீட்டு நாய்கள் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.

இந்த புதிய தீர்மானம் தொடர்பாக ஏதும் ஆட்சேபனைகள் இருந்தால் மாநகராட்சி நகர் நல அலுவலருக்கு எழுத்து மூலம் தெரிவிக்கலாம்” என அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்த உத்தரவின் மூலம் சாலைகளில் திரியும் விலங்குகளால் ஏற்படும் வாகன விபத்துக்கள் தவிர்க்கப்படும் என மதுரை வாகன ஓட்டிகள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், மதுரை மாநகராட்சி பகுதிகளில் கடந்த வாரங்களில் குதிரை, மாடு ஆகிய விலங்குகள் சாலை விபத்தில் இறந்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும், மதுரை பைபாஸ் சாலையில் கேட்பாரற்று சாலைகளில் அவிழ்த்து விடப்பட்டுள்ள மாடுகள் இரண்டும் ஒன்றை ஒன்று சண்டையிட்டுக் கொண்டும் இருப்பது வாகன ஓட்டிகள் அச்சம் அதிகரித்து, மாநகராட்சி உத்தரவு என்ன ஆனது என்கிற சந்தேகமும் வலுத்துள்ளது. இனியும் தாமதிக்காமல் மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Views: - 100

0

0