போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்: பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை

25 February 2021, 2:28 pm
Quick Share

மதுரை: 14 வது ஊதிய ஓப்பந்த பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி மதுரையில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதால் மதுரை மண்டலத்தில் பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை.

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், சோழவந்தான், எல்லீஸ்நகர், பசுமலை, திருப்பரங்குன்றம், மேலூர், புதூர் உள்ளிட்ட 14 பனிமனைகளில் இருந்து 900க்கும் மேற்பட்ட பேருந்துகள் மதுரை நகர், புறநகர் மற்றும் தொலைதூர பேருந்துகளாக இயக்கப்படுகின்றன. இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்திய நிலையில் 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற பேச்சுவார்த்தைக்கு அழைக்க கோரி இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

மாவட்டத்தில் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை. தற்போது வரை 20 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. மதுரை மண்டலத்திற்குள் மட்டுமே பேருந்துகள் இயங்குகின்றன. திருநெல்வேலி, செங்கோட்டை, திருச்சி, கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய தொலைதூர பேருந்துகள் இயங்கவில்லை, இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து தொழிலாளர் சிஐடியு மாவட்ட தலைவர் அழகர்சாமி கூறுகையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்க உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், பின்னர் நிறைவேற்றப்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.

கடந்த 2016 ஒப்பந்தத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் 7000 கோடி ரூபாயை கழகங்கள் செலவு செய்து விட்டன. தற்போது அந்த தொகை 8000 கோடியாக உயர்ந்துள்ளது. போக்குவரத்து துறையின் வரவுக்கும் செலவுக்கும் ஆன இடைவெளியை மாநில அரசாங்கம் கொடுக்க வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது போக்குவரத்து தொழிலாளர்கள் சம்பளம் மட்டுமே கொடுக்கப்பட்டு வருகிறது அவர்கள் சம்பளத்தில் பிடிக்கப்படும் பிடித்தம் செய்யக் கூடிய பிஎஃப் மற்றும் எல்ஐசி, கூட்டுறவு பண்டகசாலை உள்ளிட்ட பணங்கள் அந்தந்த நிறுவனங்களுக்கு செலுத்தப் படுவதில்லை.

இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களது குடும்பங்களில் நடக்கின்ற சுபநிகழ்ச்சிகள், குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு கூட பிஎஃப்., பணத்தில் விண்ணப்பித்தால் பணம் கிடைப்பதில்லை. தற்போது விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் போக்குவரத்து தொழிலாளர்கள் மிகவும் துன்பப் பட்டு வருகிறார்கள். அனைத்து துறைகளை காட்டிலும் குறைந்த ஊதியத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். எனவே 14 ஆவது ஊதிய உயர்வு தொடர்பான பிரச்சனைகளை பேசி மாநில அரசு உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Views: - 1

0

0