திருச்சி கோவிலில் காவலாளியை தாக்கி கொள்ளை: 2 வாலிபர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிரம்

3 February 2021, 2:10 pm
Quick Share

திருச்சி: திருச்சி கோவிலில் அதிகாலை காவலாளியை தாக்கி கொள்ளையடித்து சென்ற 2 வாலிபர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி – புதுக்கோட்டை சாலையில் திருச்சி சர்வதேச விமான நிலையம் அருகே அண்ணா கோளரங்கம் உள்ளது. கோளரங்கத்திற்கு எதிரில் பச்சநாச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருச்சி கொட்டப்பட்டு இந்திரா நகரைச் சேர்ந்த ராஜரத்தினம் (63) என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கோவில் நிர்வாகிகள் வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு சென்றனர். ராஜரத்தினம் காவலாளி பணியில் இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென பூட்டு உடைக்கும் சத்தம் கேட்டு விழித்த ராஜரத்தினம் கருவறை அருகே இருந்த கதவு திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கோவிலுக்குள் நுழைந்த 2வாலிபர்களை தடுக்க முயன்றார். அப்போது அவர்கள் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். இதில் நிலை குழைந்து படுகாயமடைந்த நிலையில் மயங்கி விழுந்தார். அவரை பிடித்து அவருடைய வேஷ்டியால் அவரின் கால்களை கட்டியும், அங்கிருந்த சால்வையால் கைகளை கட்டி போட்டுவிட்டு அம்மன் கழுத்தில் இருந்த இரண்டு தங்க காசு மற்றும் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் காவலாளி ராஜரத்தினம் வைத்திருந்த ரூ.4,500 பணத்தையும் கொள்ளையடித்து அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இது குறித்து ராஜத்தினம் கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் நிர்வாகிகள் விரைந்து சென்று திருச்சி விமான நிலையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் சென்றனர். பின்னர் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.கைரேகை நிபுணர்களும் விரைந்து சென்று அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். காயமடைந்த காவலாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய வாலிபர்களை தேடி வருகின்றனர்.

Views: - 0

0

0