யானை தந்தங்கள் கடத்தி விற்பனை செய்ய முயன்ற 2 பேர் கைது

3 November 2020, 7:57 pm
Quick Share

தூத்துக்குடி: தூத்துக்குடியில் யானை தந்தங்கள் கடத்தி விற்பனை செய்ய முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து மாவட்ட வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.   

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் காவலர்கள் கஞ்சா பரிமாற்றம் தொடர்பான புகாரின்பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கணேசன் நகர் பகுதி அருகே ரோந்து சென்ற பொழுது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் போலீசை கண்டதும் அவசர அவசரமாக அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல முயன்றனர். சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் தூத்துக்குடி கணேசன் காலனியை சேர்ந்த ராஜவேல், முனியசாமி, மீன் வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது.

தொடர்ந்து இருசக்கர வாகனத்தை சோதனையிட்டபோது விற்பனைக்காக 4 யானை தந்தங்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்துகையில், குலசேகரப்பட்டினத்தில் நாடோடி மக்களிடம் 3000 ரூபாய்க்கு யானைத் தந்தங்களை விலைக்கு வாங்கியதும், தொடர்ந்து அவற்றை அதிக லாபத்துக்கு தூத்துக்குடியில் விற்க முயற்சி செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ராஜவேல், முனியசாமி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்களையும், யானை தந்தங்களையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்கள் மாவட்ட வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.   

Views: - 16

0

0