சட்டமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகளின் வாகன பேரணி

3 March 2021, 3:31 pm
Quick Share

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் சட்டமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகளின் வாகன பேரணியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலின் போது பொது மக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்ட வாகன பேரணியினை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான சந்திப் நந்தூரி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களிடையே வாக்களிக்க வேண்டுமென்றே விழிப்புணர்வினை ஏற்படுத்துகிறது.

முன்னதாக, மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருப்பது குறித்தும் விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து செய்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, நடைபெறக்கூடிய சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 100% வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை வாக்குச்சாவடியில் செய்யப்பட்டு வருவதாகவும் மாவட்டத்தில் 27 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் உள்ளதாகவும் அவர்கள் 100% வாக்களிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Views: - 4

0

0