பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் இரண்டரை கோடி முறைகேடு: 4 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்…

3 August 2020, 7:55 pm
Quick Share

திருவாரூர்: மன்னார்குடியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் இரண்டரை கோடி முறைகேடு செய்த 4 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட தலையாமங்கலம் ஊராட்சியில் கடந்த 2017 ,18, 19 ஆகிய ஆண்டுகளில் பிரதம மந்திரியின் தொகுப்பு வீடு கட்டும் திட்டம் மற்றும் தனிநபர் கழிப்பறை கட்டும் திட்டத்தில் சுமார் இரண்டரை கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக தலையாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 21 நபர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

புகார் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆனந்த் உத்தரவின் பேரில் உதவி திட்ட அலுவலர் தலைமையில் 10 பேர் கொண்ட அரசு ஊழியர்கள் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய மேலாளர் ராஜா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கஸ்தூரி, ஒன்றிய உதவி பொறியாளர் சண்முகசுந்தரம், பணி மேற்பார்வையாளர் பிரபாகரன், ஆகிய 4 பேரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக உறுதியாகியதை அடுத்து நால்வரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.