அதிக வட்டி தருவதாக தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில் சுருட்டல்: குமரியில் இருவர் கைது

Author: Udayaraman
8 January 2021, 3:05 pm
Quick Share

கன்னியாகுமரி: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், அதிக வட்டி தருவதாக கூறி ஆயிரக்கணக்கானோரிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்து, மேலும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் யுனிக் புரமோட்டர்ஸ் அண்ட் எஸ்டேட் இந்தியா லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தை திருவிதாங்கோடு செய்யது அலி, அழகிய மண்டபம் சசிதரன் எட்வின் சுதாகர், மார்த்தாண்டம் ரமேஷ் உள்ளிட்டோர் நடத்தி வந்துள்ளனர். இவர்கள் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியதால் நாகரகோவிலை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் தனது பெயரிலும் தனது மனைவி பெயரிலும் தனது தாயார் பெயரிலும் ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தார்.

கடந்த 2019ம் ஆண்டு முதிர்வு தொகையை திரும்ப கேட்ட போது, வசந்தகுமாரிடம் இருந்த ஆவணங்களை பெற்றுக் கொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் தலைமறைவாகியுள்ளனர். இதனால் ஏமாற்றமடைந்த வசந்தகுமார், நிறுவனந்நின் நிர்வாகிள் மீது அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பிரதிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில் செய்யதலி, சசிதரன் எட்வின் சுதாகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஏனைய பிரதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த நிதி நிறுவனத்தில் குமரி மாவட்டம் மட்டுமின்றி ராமநாதபுரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்துள்ளனர். இவ்வாறு ஏமாற்றம் அடைந்தவர்கள் தங்கள் அசல் அல்லது நகல் ஆவணங்களை நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் உடன் சமர்ப்பிக்குமாறு நாகர்கோயில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் முத்துப்பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Views: - 44

0

0