பகல் கொள்ளையர்கள் இருவர் கைது: அவர்களிடமிருந்து நகைகள் பறிமுதல்
Author: kavin kumar7 November 2021, 4:56 pm
திருவள்ளுர்: திருவள்ளூர் அர்ச்சகர் வீட்டில் கொள்ளையடித்த பகல் கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்தனர்,
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வருபவர் சத்தியநாராயணன். இவரது வீட்டில் கடந்த 29ஆம் தேதி ஆள் இல்லாத நேரம் பார்த்து பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து 21சவரன் தங்க நகை 4 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்றனர்.இதுகுறித்து திருவள்ளூர் எஸ்பி வருண்குமார் உத்தரவின் பேரில் டிஎஸ்பி சந்திரதாசன் மேற்பார்வையில் திருவள்ளூர் டவுன் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வந்தனர்.அதில் ஏற்கனவே 2019ஆம் ஆண்டு திருவள்ளுர் மாவட்டம் வெங்கல் காவல் நிலையத்தில் கொள்ளை வழக்கில் தொடர்புடைய சென்னை கிண்டி சேர்ந்த அரவிந்த் குமார் வயது 37 நபரின் முகச்சாயல் ஒத்து போனதை கண்டு பிடித்து அவரை விசாரணை வளையத்திற்குள் காவல்துறையினர் கொண்டு வந்தனர்,அப்போது அர்ச்சகர் வீட்டில் திருடியதை அரவிந்த் குமார் ஒப்புக் கொண்டுள்ளார்.
இவரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் தமிழகம் முழுவதும் பகலில் சர்வ சாதாரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடிப்பது இவருக்கு வழக்கமாக கொண்டு வருபவர் என்றும் தமிழகம் முழுவதும் இவர் மீது பல்வேறு காவல் நிலையத்தில் 40 கொள்ளை வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது,இந்நிலையில் அரவிந்தகுமார் கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி வேலூர் சிறையில் இருந்து பிணையில் வெளியேவந்துள்ளார், சிறையிலிருந்து வெளியே வந்த அரவிந்த் குமார் அவர் பழையபடி கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளார், அப்போது அவருடன் சென்னை பெரம்பூர் சேர்ந்த விஜயராஜ் வயது 27 நபர் தீபாவளி பண்டிகைக்கு பணம் தேவை என்பதால் அவருடன் கூட்டுச் சேர்ந்து அர்ச்சகர் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இவர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த 21 சவரன் தங்க நகை 3.5 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்து கொள்ளையர்களை திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.
0
0