லாரியை லாவகமாக திருடி ஓட்டி சென்ற இரண்டு இளைஞர்கள் கைது

Author: Udhayakumar Raman
3 September 2021, 4:29 pm
Quick Share

நாகப்பட்டினம்: நாகை அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் லாரியை லாவகமாக திருடி ஓட்டி சென்ற இரண்டு இளைஞர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், காட்டூர்  கலையரசன் என்பவர் கீழ்வேளூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் தனக்கு சொந்தமான லாரியை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்டுள்ளார். லாரியை வழக்கமாக நிறுத்தும் கீழ்வேளூர்  ரயில் நிலையம் அருகில் உள்ள கிடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள  லாரி காணவில்லை என அங்குள்ள ஊழியர்கள் ஓட்டுனருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து லாரி ஓட்டுனர்  இது குறித்து கீழ்வேளூர் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் கீழ்வேளூர் போலீசார் தேவூர் அருகே வெண்மணி ஆர்ச் அருகில் வாகன சோதனை மேற்கொண்டபோது, அவ்வழியாக  லாரியில் வந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்ததில் லாரியை திருடி சென்றதை கண்டறிந்தனர். போலீசார் விசாரணையில் கீழ்வேளூர் அருகே இறையான்குடி, சந்திர படுகை பகுதியை சேர்ந்த தனசேகரன், வலிவலம் பகுதியை சேர்ந்த சிவபாலன் என்பதும் தெரிய வந்தது. பின்னர் லாரியை பறிமுதல் செய்த கீழ்வேளூர் போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 151

0

0