ஊபா, தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம்

Author: kavin kumar
15 August 2021, 5:31 pm
Quick Share

திருச்சி: மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஊபா, தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி ரயில் நிலையம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டபோது காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

புதிய வேளாண் திருத்த சட்டம், குடியுரிமை திருத்த சட்டம், சுற்றுச்சூழல் சட்டம், மின்சார சட்டம், தொழிலாளர் சட்ட திருத்தங்கள், புதிய கல்விக் கொள்கை திட்டம் உள்ளிட்ட சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், தேசிய பாதுகாப்பு சட்டம், UAPA போன்ற சட்டங்களை பயன்படுத்தி ஒன்றிய அரசு மக்களை அச்சுறுத்தி வருகிறது. மத்திய அரசை விமர்சனம் செய்பவர்கள் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். பழங்குடிஇன மக்களுக்காக போராடிய ஸ்டான்சுவாமி UAPA சட்டத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த நிலையில் பிணைக்கிடைக்காததால் உயிரிழந்தார். மேலும் பலர் அந்த சட்டங்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மக்களை ஒடுக்க ஒன்றிய அரசு அந்த சட்டங்களை பயன்படுத்தி வருகிறது.

எனவே அந்த சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், இச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட சுதா பரத்வாஜ், வரவரராவ், ஹனிபாபு, சூசன் ஆபிரகாம், வெர்னர் கன்சால்வஸ் உள்ளிட்ட சமூகப் போராளிகளை விடுதலை செய்ய கோரியும், இந்திய சுதந்திரம் பறி போய் உள்ளது என்பதை எடுத்துரைக்கும் வகையில் 75வது சுதந்திர தினமான இன்று திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தை மாநில பொருளாளர் காளியப்பன் தலைமையில் 15க்கு மேற்பட்ட அமைப்பினர் உட்பட 500க்கு மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக திருச்சி பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு இருந்து புறப்பட்டு கோஷமிட்டு பேரணியாக ரயில்வே ஜங்ஷன் முன்பு கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஜங்ஷன் ரயில் நிலையத்திற்குள் போராட்டக்காரர்களுக்கு அனுமதி மறுத்ததால் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இந்த முற்றுகைப் போராட்டத்தில் கண்டன உரையை மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ வழங்கினார். மேலும் சுதந்திர தினத்தன்று எந்த ஒரு அசம்பாவிதமும் நடந்து விடக்கூடாது என்பதற்காக திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரயில் நிலையத்திற்கு முன்பு காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தினர்.

Views: - 151

0

0