லிப்ட் கொடுப்பது போல் ஏற்றி 2 பெண்களிடம் 10 சவரன் நகையை மிரட்டி பறிப்பு : காரில் இருந்து தள்ளிவிட்டு சென்ற அடையாளம் தெரியாத நபர்

Author: Udhayakumar Raman
23 July 2021, 5:59 pm
Quick Share

வேலூர்: வேலூர் அருகே லிப்ட் கொடுப்பது போல் ஏற்றி 2 பெண்களிடம் 10 சவரன் நகையை மிரட்டி பறித்துவிட்டு காரில் இருந்து தள்ளிவிட்டு சென்ற அடையாளம் தெரியாத நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் முருகா ரெட்டி தெருவை சேர்ந்தவர் சரவணன். மோட்டார் சைக்கிள் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சுஜாதா. இவருடைய உறவினர் சென்னையைச் சேர்ந்த மூர்த்தியின் மனைவி சிவபூஷனம் ஆகியஇருவரும் இன்று வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ரோஸ் பேட்டையில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு செல்வதற்காக சோளிங்கர் பஸ் நிலையத்தில் பேருந்துக்காக காத்துக்கொண்டிருக்கும் போது சிவப்பு நிற காரில் வந்த ஒருவர் “இருபெண்களிடம் எங்கு செல்கிறீர்கள் என கேட்டுள்ளார். அப்போது சுஜாதா குடியாத்தம் செல்வதாக கூறினார்.

அந்த டிரைவர் நானும் குடியாத்தம் செல்கிறேன் காரில் ஏறுங்கள் இருவரையும் அங்கு விட்டுவிடுகிறேன் 150 ரூபாய் கொடுத்தால் போதும் என தெரிவித்துள்ளார். இதனை நம்பி சுஜாதாவும், சிவபூசணமும் காரில் ஏறி சோளிங்கரில் இருந்து வாலாஜா, வேலூர் வழியாக குடியாத்தம் நோக்கி செல்லும் போது பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது கார் ஓட்டுனர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே சென்றதும் காரை மெதுவாக ஓட்ட ஆரம்பித்து திடீரென காரை மீண்டும் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திரும்பி வேலூர் நோக்கி ஓட்டினார். இதனால் சுஜாதா, சிவ பூசனம் இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

குடியாத்தத்திற்கு செல்லாமல் வேலூர் நோக்கி மீண்டும் செல்கிறீர்கள் என கேட்டதற்கு டிரைவர் எதுவும் சொல்லாமல் காரை வேகமாக வேலூர் நோக்கி ஓட்டிவந்தார். கார் அப்துல்லாபுரம் கடந்து வேலூர் அருகே வந்த போது கார் ஓட்டுனர் திடீரென சிவபூசணம் அணிந்திருந்த செயின் மற்றும் தங்க வளையல்களை மிரட்டி பறித்துள்ளார். மேலும் சுஜாதா அணிந்திருந்த நகைகளை பறிக்க முயன்றூள்ளார். காரில் டிரைவர் சீட்டுக்கு பின்னால் இருந்த சுஜாதா அவரிடமிருந்து நகைகளை பாதுகாக்க போராடியுள்ளார். காருக்குள் சிக்கிக்கொண்ட பெண்கள் இருவரும் அலறி கூச்சலிட்டுள்ளனர்.

மேலும் நீங்கள் அணிந்துள்ள நகைகளை என்னிடம் கழட்டி கொடுத்து விடுங்கள் உங்களை உயிரோடு விட்டு விடுகிறேன் இல்லையென்றால் உங்களை எங்காவது கொண்டு சென்று கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார். இதற்கிடையே கார் வேலூர் சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்தின் அருகே கெங்கையம்மன் கோவில் எதிரே சுரங்கப்பாதை பணிகள் நடைபெறும் இடத்தில் ராட்சத லாரிகள் நின்றுள்ளதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை கண்டதும் சுதாரித்துக்கொண்ட கார் ஓட்டுனர் எப்படி தப்பிப்பது என யோசித்தபடி காரை மெதுவாக ஓட்டி செல்லும் போது காரில் இருந்த சுஜாதா காரின் கதவைத் திறந்து வெளியே குதித்துள்ளார்.

சாலையில் உருண்டு விழுந்து அவர் அலறி கூச்சலிட்டுள்ளார். அந்த நேரத்தில் காரில் இருந்த சிவபூசணத்தை வெளியே தள்ளிவிட்டு டிரைவர் வேகமாக காரை ஓட்டி சென்றுள்ளார்இரண்டு பெண்கள் காரில் இருந்து விழுவதைக் கண்ட சத்துவாச்சாரி பொதுமக்கள் காரை நோக்கி வேகமாக ஓடினர் .மேலும் அங்கிருந்த போக்குவரத்து போலீசார் காரை மடக்கி பிடிக்க முயற்சி செய்தனர் .ஆனால் போலீசார் மீது மோதுவது போல் வேகமாக வந்து டிரைவர் காரில் சென்னை நோக்கி ஓட்டி தப்பி சென்றுள்ளளார்.காரில் இருந்து விழுந்த 2 பெண்களுக்கும் தலை, கை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது.

தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் மீட்டு போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.காரில் வந்த மர்ம நபர் லிப்ட் கொடுப்பது போல நடித்து தங்களை அடித்து 10 பவுன் நகைகளை பறித்து சென்றுவிட்டதாக இருவரும் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சத்துவாச்சாரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அடையாளம் தெரியாத நபர்கள் லிப்ட் கொடுத்தால் நம்பி செல்லக்கூடாது என போலீசார் அறிவுறுத்தினர். நகைபறித்து தப்பிச் சென்ற மர்ம நபரை பிடிக்க கார் பதிவு எண் மூலம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Views: - 475

0

0