முழு கொள்ளளவை எட்டிய உப்பாறு அணை:விவசாயிகள் மகிழ்ச்சி…

Author: Udhayakumar Raman
28 November 2021, 3:00 pm
Quick Share

திருப்பூர்: தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணை கடந்த 20 ஆண்டுகளுக்கு பின்னர் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உற்பட்ட உப்பாறு அணை தனது முழு கொள்ளளவான 24 அடி எட்டியதால் நேற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் 10 மணிக்கு மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விட்டனர். இந்த அணை கடந்த 20 ஆண்டுகளாக போதிய அளவில் தண்ணீர் இல்லாமல் பெரும்பாலான நேரங்களில் வறண்டு இருந்தது. இதனிடையே உப்பாறு பகுதி விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக திருமூர்த்தி அணையில் இருந்து இந்த அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த நிலையில் திருமூர்த்தி அணை மற்றும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேலும் திருமூர்த்தி அணையில் இருந்து உபரி நீர் வினாடிக்கு 200 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு அரசூர் ஷட்டர் வழியாக உப்பாறு அணைக்கு நீர்வரத்து வந்து கொண்டுள்ளது. இதன் காரணமாகவும் உப்பாறு அணையை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதாலும் அணைக்கு 400 புள்ளி 70 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதனால் உப்பாறு அணை நேற்று இரவு 10 மணி அளவில் அணையின் முழு கொள்ளளவான 24 அடியை எட்டியது. இதன் காரணமாக நேற்று இரவு 400 புள்ளி 70 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. முழு கொள்ளளவை எட்டியவுடன் உபரி நீர் திறந்து விட்டதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே அணையின் கரையோர பகுதிகளில் உள்ள தொப்பம்பட்டி, சின்ன கவுண்டம்பாளையம், நஞ்சியம்பாளையம், ஆலாம்பாளையம் உள்ளிட்ட 18 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உப்பாறு அணைக்கு தண்ணீர் வருவது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனைத்தொடர்ந்து தாராபுரம், குண்டடம், குடிமங்கலம், உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள், இளைஞர்கள் ஆகியோர் உப்பாறு அணைக்கு வந்து கொண்டுள்ளனர். கல்லூரி மாணவர்கள், மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அணை முன்பு நின்று ஒருவருக்கொருவர் செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்ந்து வருகின்றனர். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு உப்பாறு அணைக்கு தண்ணீர் வந்ததால் விவசாயிகள் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Views: - 334

0

0