போலி பீடிகள் விற்பனை செய்த இருவர் கைது:73 பண்டல் பீடிகள் பறிமுதல்…

Author: kavin kumar
28 October 2021, 2:29 pm
Quick Share

தேனி: தேனியில் பிரபல கம்பெனிகளின் பெயரில் போலி பீடிகள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 73 பண்டல் பீடிகளை பறிமுதல் செய்தனர்.

தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் பிரபல கம்பெனிகளின் பெயர்களில் போலி பீடிகள் விற்பனை செய்யப்பட்டு வருவதும், அவை பிடிபடுவதும் தொடர்கதையாகி உள்ளது.இதனால் பிரபல கம்பெனிகள் ஒன்றிணைந்து தங்களது நிறுவனத்தின் பெயரில் போலி பீடிகள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று கண்காணிக்க ஒரு குழுவை அமைத்து உள்ளனர்.அந்தக் குழு போலி பீடிகள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று தேனி மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் அந்தக் குழுவினர் தேனி மாவட்டத்தில் நேற்று ஆய்வு செய்த போது தேனி அருகே உள்ள ஜங்கால்பட்டியில் முருகேசன் என்பவருக்குச் சொந்தமான பலசரக்குக் கடையில் போலி பீடிகள் விற்பனை செய்யப்பட்டதும், அவரது கடையில் 20க்கும் மேற்பட்ட பண்டல்களில் போலி பிடிகள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து பீடி கம்பெனியைச் சேர்ந்த கண்காணிப்பு குழுவினர் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற வீரபாண்டி காவல்துறையினர் பலசரக்குக் கடை உரிமையாளர் முருகேசனிடம் நடத்திய விசாரணையில்,சீலையம்பட்டியைச் சேர்ந்த அஜய் என்பவர் முருகேசனுக்கு போலி பீடிகளை விநியோகித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அஜயை தேடிக் கண்டுபிடித்த காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் போலி பீடிகள் விநியோகஸ்தராக இருந்து வருவதை அஜய் ஒப்புக்கொண்டார். மேலும் அவரிடம் இருந்து 53 பண்டல்கள் போலி பீடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து கைப்பற்றப்பட்ட 73 பீடி பண்டல்களை வீரபாண்டி காவல் நிலையம் கொண்டு வந்த போலீசார் போலி பீடியை விற்பனை செய்த முருகேசன் மற்றும் அஜய்ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தேனி மாவட்டம் தேனி, சின்னமனூர்,கம்பம், உள்ளிட்ட பகுதிகளில் போலி பீடிகள் விற்பனை அதிக அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 217

0

0