தூத்துக்குடியில் 200 இடங்களில் வாகன தணிக்கை… மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பேட்டி…

2 August 2020, 2:26 pm
Quick Share

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கை கடைப்பிடிக்க 200 இடங்களில் வாகன தணிக்கை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் 7ம் கட்டமாக ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே ஆகஸ்ட் மாதம் முழுவதிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவித தளர்வும் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்டு மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமையான இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

தூத்துக்குடி பழைய மாநகராட்சி முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அவசியமின்றி இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வந்தவர்களை போலீசார்  எச்சரித்து அனுப்பினார். தொடர்ந்து மத்திய பாகம் காவல்துறை சார்பில் நடைபெற்ற கபசுர குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அவர் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரையும்,  முகக்கவசங்களையும் வழங்கி அறிவுரை கூறி அனுப்பினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடைப்பிடிக்கப்படும் முழு ஊரடங்கில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 200 இடங்களில் வாகன தணிக்கை செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாநகர் பகுதியில் மட்டும் 26 இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கில் அவசியமின்றி வாகனங்களில் வருவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக மாவட்டத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட 7 ஆயிரம் வழக்குகளில் 3600 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் 190 வாகனங்கள் மட்டுமே தற்போது காவல் நிலையங்களில் உள்ளது. மற்றவை வழக்குப்பதிவு செய்யப்பட்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.  சட்டத்துக்கு புறம்பாக சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்றார்.