குடிதண்ணீர் கேட்டு கிராம மக்கள் காலி குடங்களுடன் மறியல்

6 August 2020, 5:37 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் காட்டேரிக்குப்பத்தில் குடிதண்ணீர் தட்டுப்பாட்டை போக்காத அரசை கண்டித்தும், தரமான குடிதண்ணீர் கேட்டு கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி மாநிலம் காட்டேரிக்குப்பத்தில் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக குடிநீர் பிரச்சனை இருந்து வருகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர் அமைக்க வேண்டும் என்றும், குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் டி.பி.ஆர். செல்வம் அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தார். அரசு செவி சாய்க்காத நிலையில் கடந்த மாதம் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட போது உடனடியாக குடிநீர் தட்டுப்பாடு போக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

ஆனால் ஒரு மாதம் ஆகியும் இதுவரை குடிநீர் தட்டுப்பாடு போக்கப்படவில்லை. அரசு சார்பில் புதியதாக போர்வெல்லும் அமைக்காததால் குடிதண்ணீர் இல்லாமல் காட்டேரிக்குப்பத்தில் வசிக்கும் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில் இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.பி.ஆர்.செல்வம் தலைமையில் காட்டேரிக்குப்பம் 4 முனை சந்திப்பில் காலி குடங்களுடன் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள், ஆண்கள் என ஊர் பொதுமக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட தூரம் வாகனங்கள் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் குடிதண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுத்தால் தான் மறியலை கைவிடுவோம் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.அதனை தொடர்ந்து உடனடியாக சுத்தமான தரமான குடிதண்ணீர் வசதி ஏற்படுத்தி தந்து மக்களின் குடிதண்ணீர் பிர்ச்சனை தீர்ப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Views: - 10

0

0