பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் திறப்பு: கரையோர பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் பாதுகாப்புடன் இருக்க எச்சரிக்கை

27 November 2020, 5:30 pm
Quick Share

திருவள்ளூர்: பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து ஆயிரம் கன அடி உபரிநீர் 5 மணிக்கு கொசஸ்தலை ஆற்றின் வழியாக திறக்க உள்ளதால் கரையோர பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் பாதுகாப்புடன் இருக்க மாவட்ட ஆட்சியர் பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பெரிய மனோபுரம், பெரும்பேடு, குப்பம், ஏ.ரெட்டி பாளையம் உள்ளிட்ட ஆரணிஆற்றின் கரையோரங்களில் கரைகள் பலவீனமாக உள்ளதால் மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பிச்சாட்டூர் அணையில் இருந்து 7600 கன அடி வினாடிக்கு ஆற்றில் உபரிநீர் வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமத்தில் வெள்ளநீர் புகாமல் இருப்பதற்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் ஆகியோருடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பேசுகைளில், ” பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம், அம்மபள்ளி அணைக்கட்டு மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து உபரிநீர் 18 ஆயிரம் கன அடிக்குமேல் உபரிநீர் வந்து கொண்டிருப்பதால் அதன் மொத்த உயரம் 35 அடியில் 33 அடியை நெருங்கி வரும் நிலையில், நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு கருதி முதல் கட்டமாக ஆயிரம் கனஅடி உபரி நீர் 5 மணிக்கு திறக்க உள்ளதாகவும், மேலும் படிப்படியாக உபரி நீர் திறப்பு அதிகரிக்கும் எனவும், கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளதாகவும்,

ஆண்டார்மடம் பகுதியில் ஆரணியாறு வெள்ள நீர் புகுந்ததால் பொது மக்கள் அனைவருக்கும் உணவு உள்ளிட்டவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விவசாய பயிர்கள் பாதிப்பு குறித்தும் கணக்கீடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் திருக்கண்டலம் தாமரைப்பாக்கம் சீமாவரம் பொதுமக்கள் ஆற்றில் இறங்காமல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 16

0

0