பத்திர பதிவின் போது இரு தரப்பு பண பரிவர்த்தனை ஆன்லைன் மூலமாக நடைபெறுகிறதா…? வருமான வரிதுறை கண்காணிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு…

27 August 2020, 1:47 pm
Madurai HC- updatenews360
Quick Share

மதுரை: தமிழகத்தில் பதிவுத் துறையில் சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திர பதிவின் போது இரு தரப்பு பண பரிவர்த்தனை 2 லட்சத்திற்கும் மேல் நடைபெறும் பொழுது, மின்னணு மூலமாகவோ ஆன்லைன் மூலமாக நடைபெறுகிறதா? என வருமான வரிதுறை கண்காணிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெறும் நில உரிமை மாற்றம்,ஒப்பந்தம், தானம் போன்ற நில உரிமை மாற்றம் அதன் பயனாக நடைபெறும் பண பரிவர்த்தனையை வருமான வரி சட்டம் பிரிவு 269 ST சட்டபிரிவின் படி நடைபெற வேண்டும். இதற்காக உரிய வழிமுறைகளை வகுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரிய மனு மீதான விசாரணையில், இந்த நடைமுறை முறையாக சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரபதிவின் போது நடமுறைபடுத்த படுகிறதா என வருமான வரிதுறை கண்காணிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த மதிவாணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது. டிஜிட்டல் மற்றும் மின்னணு பரிவர்த்தனை உள்ளிட்ட பண பரிவர்த்தனை மூலம் கருப்புப் பணத்தை ஒழிக்கலாம் என்று மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இருந்து 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி வருமான வரி சட்டத்தில் ஒரு புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. வருமான வரி சட்டம் பிரிவு 269 STமற்றும் 271 DA கொண்டுவரப்பட்டது.

இந்த புதிய சட்டபிரிவில், ஒரு நபர் 2 லட்சம் ரூபாய்க்கு மேலாக பண பரிவர்த்தனை மேற்கொண்டால், அந்த பண பரிவர்தனை டிஜிட்டல் முறையிலோ அல்லது காசோலை உள்ளிட்ட பரிவர்த்தனை மூலமாகவோ மற்றும் மின்னனு பரிவர்த்தனை முறைகளான. NEFT , RTGS முறையில் நடைபெற வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பத்திரபதிவுத்துறை என்பது தமிழக அரசுக்கு வருவாய் அளிக்கக்கூடிய துறையாக உள்ளது.

தமிழகத்தில் நடைபெறும் நில உரிமை மாற்றம் , குத்தகை, அடமானம், உள்ளிட்ட அனைத்து வகை உரிமை மாற்றம் தற்காலிக உரிமை மாற்றம் போன்றவை பதிவுத்துறை மூலம்தான் நாள்தோறும் நடைபெறுகிறது. இதற்காக நடைபெறும் பதிவின் போது நடைபெறும் ரூ. 2 லட்சத்திற்கு மேலான பண பரிவர்த்தனை வருமான வரித்துறை சட்டத்தில் கூறியபடி டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாகவோ அல்லது காசோலை மூலமாக அந்த பணத்தில் நடைபெறுவதில்லை. சேமிப்பு கணக்கில் பத்து லட்சத்திற்கும் மேல் வைப்பு தொகை வைத்திருப்பவர்களுக்கும்,

வங்கி கணக்கும் 50 ஆயிரத்திற்கும் மேல் பண பரிவர்த்தனை நடைபெற்றாலும் அந்த தகவல் வங்குயில் உள்ள தானியங்கி தகவல் மூலமாக வருமான வரித்துறைக்கு தெரிந்துவிடும். இதன் மூலம் பண பரிவர்த்தனை காண மூலங்களை கண்டுபிடித்து விடலாம். ஆனால் தமிழகத்தில் பதிவுத்துறையில் சார் பதிவாளர் அலுவலகங்களில் 2 லட்சத்திற்கும் மேலான இரு தரப்பு பண பரிவர்த்தனை, மின்னணு மூலமாகவோ ஆன்லைன் மூலமாக நடைபெறுவதில்லை. இது சட்டவிரோதம். எனவே தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெறும் நில உரிமை மாற்றம், ஒப்பந்தம் , உரிமை மாற்றம், அடமானம், தானம் போன்ற நில உரிமை மாற்ற ம் அதன் பயனாக நடைபெறும் பண பரிவர்த்தனையை வருமான வரி சட்டம் பிரிவு 269 ST சட்டபிரிவின் படி நடைபெற வேண்டும்.

இதற்காக உரிய வழிமுறைகளை வகுக்க உரிய. உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார் .
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பதிவு துறை சார்பில், இந்த நடைமுறை கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நடைமுறையில் உள்ளது என தெரிவித்தார். இந்த நடைமுறை முறையாக பதிவு துறை சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவின் போது நடைபெறுகிறதா என வருமான வரி துறை கண்காணிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.